×

கோடை விழாவை முன்னிட்டு புதுப்பொலிவு பெறும் ஏற்காடு: முக்கிய இடங்கள் சீரமைப்பு

சேலம்: கோடைவிழாவையொட்டி ஏற்காடு புதுப்பொலிவு பெற்றுவருகிறது. மலைப்பாதைகளை பராமரித்து முக்கிய இடங்களை சீரமைத்து மேலும் அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏற்காட்டில் பரந்து விரிந்த ஏரி, படகு இல்லம், லேடீஸ் சீட், மான்பூங்கா, அண்ணா பூங்கா, ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், தலைச்சோலை அண்ணாமலையார் கோயில் என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் காண்போரை கவர்ந்து நிற்கிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.

மேலும் தற்போது ேகாடைகாலம் என்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை பல்ேவறு வசதிகளை செய்துள்ளது. இது ஒருபுறமிருக்க, ஏற்காட்டின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டு தோறும் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தவகையில் நடப்பாண்டு கோடைவிழா வரும் 21ம்தேதி தொடங்கி 28ம்தேதி நடக்கிறது. இதையொட்டி ஏற்காடு புதுப்பொலிவு பெற்று வருகிறது. மலைப்பாதைகளை பராமரித்து முக்கிய இடங்களை மேலும் அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்காட்டில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு நிலைகளில் நிதி ஒதுக்கியுள்ளது. ₹10கோடி மதிப்பீட்டில் இதற்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இதேபோல் பரந்துவிரிந்த மரகதம் ஏரியில் நவீனமாக 3டி தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளிகாட்சி அமைப்பதற்கான பணிகள் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க நடப்பாண்டு கோடைவிழாவானது வரும் 21ம்தேதி தொடங்கி, 28ம்தேதி வரை 8நாட்கள் நடக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

கோடைவிழா நடப்பதால் மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இந்தவகையில் ஏற்காட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்களை கருத்தில் கொண்டு, புதுப்பொலிவூட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏற்காடு மலைப்பாதையை சுத்தமாக பராமரித்து அங்குள்ள தடுப்புச்சுவர்களில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே சாலையோரம் முளைந்திருக்கும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. குப்பைக்கழிவுகள், கண்ணாடி பாட்டில்களும் போன்றவை தேங்காதவாறு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல் முக்கிய இடங்கள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் கண்டுகளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்காடு எப்போதும் இல்லாத வகையில் இப்போது புதுப்பொலிவு பெற்று வருகிறது.

இதேபோல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்காவில் பொன்னியின்செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் 5 லட்சம் அரிய வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரோஜா கார்டனில் நூற்றுக்கணக்கான ரோஜா தொட்டில்கள், பலவகை மலர்களை கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஓரிரு இடத்தில் தொடரும் பணிகள்
ஏற்காட்டில் 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவை சீர் செய்வதற்காக கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே உடைந்து கிடந்த தடுப்புகள், சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொண்டை ஊசி வளைவில் நடைபெற்று வந்த கட்டுமான பணி 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் அங்கு 50 சதவீத பணிகள் நிறைவடையாமல் உள்ளது. ஏற்காடு கோடை விழாவின்போது தற்போது வரும் வாகனங்களை காட்டிலும் பல மடங்கு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.

The post கோடை விழாவை முன்னிட்டு புதுப்பொலிவு பெறும் ஏற்காடு: முக்கிய இடங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Festival ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி...