×

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய ஏற்காடு-போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்

ஏற்காடு : கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஏற்காட்டில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி, சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுத்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், தாவரவியல் பூங்கா, பக்கோடா பாய்ண்ட், அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அங்குள்ள ஊஞ்சல், சறுக்குகள் உள்ளிட்டவற்றில் சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பின்னர், ஏரியில் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால், படகு குழாம் களை கட்டியது. இதனிடையே கோடை விழாவை முன்னிட்டு, ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள இருக்கைகள், ஊஞ்சல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

மேலும், உணவகங்கள், சாலையோர கடைகள், வணிக வளாகங்களில் விற்பனை அமோகமாக நடந்தது. சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. குறிப்பாக அண்ணா பூங்காவில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில், கடும் நெரிசல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

சீசன் காலங்களில், வாகனங்களை நிறுத்துமிடத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவும், தேவையான அளவுக்கு போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்தை கட்டுப்படுத்த எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவிற்கு நேற்று 14,871 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கடும் வெப்பத்தை தணிக்க காவிரியில் நீராடி மகிழ்ந்த அவர்கள், சிறுவர்களுடன் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து பாம்பு பண்ணை, மீன்காட்சி சாலை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். நேற்று பார்வையாளர்கள் கட்டணமாக ₹74,355 வசூலானது. மேலும், அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 1,100 பேர் வந்திருந்தனர்.

The post கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய ஏற்காடு-போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்