×

கோடையில் சருமத்தைக் காக்க…

நன்றி குங்குமம் டாக்டர்

மூலிகைக் குளியல் பொடி!

இந்த ஆண்டு கோடை தொடங்கியது முதலே வெப்பத்தின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கையான மூலிகைக் குளியல் பொடி தயார் செய்யும் முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா. பொதுவாக ஃபீல்ட் ஒர்க் செய்பவர்களுக்கு சூரிய ஒளியின் வெப்பத்தினால் வேர்க்குரு பிரச்னை, அரிப்பு, சருமம் கருமை நிறமாக மாறுதல் போன்றவை ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள இரண்டு வேளை குளிப்பது மிகவும் நல்லது.

அதுபோன்று, காலை எழுந்ததும் வெளியே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் குளிப்பதால் பெரும்பாலும் சோப் பயன்படுத்திதான் குளித்துவிட்டு போவோம். ஆனால், நாம் பயன்படுத்தும் சோப்புகளும் சில நேரம் சரும பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். அதிலிருந்து விடுபட, வீட்டிலேயே மூலிகை குளியல்பொடி தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.

காலை அவசரத்தில், குளியல் பொடி பயன்படுத்த முடியவில்லை என்றாலும், மாலை வீடு திரும்பியதும், அன்றைய நாள் முழுக்க நம்மீது படிந்திருக்கும் அழுக்குகள், தூசுகள் எல்லாம் போக இந்த மூலிகைக் குளியல் பொடியை பயன்படுத்தி குளிக்கலாம். மூலிகை குளியல் பொடி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.சூரியஒளியின் சூட்டினால் சருமம் கறுத்துப் போவதை தடுக்கும். அதிகப்படியான வேர்வைச் சுரப்பினால் ஏற்படும் வேர்க்குருவை தடுக்கும். மேலும், வேர்வையினால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை போக்கும். வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும அரிப்பிலிருந்து பாதுகாக்கும்.

இந்தப் பொடியை உபயோகித்து குளித்துவிட்டு வரும்போது, உடல் புத்துணர்ச்சியாக இருப்பதை நன்கு உணர முடியும். குளியல் பொடி தயாரிக்கும் முறை பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, பச்சரிசி, பூலாங்கிழங்கு, வெட்டிவேர், ஆவாரம் பூ, காயந்த பன்னீர் ரோஜா பூ இதழ்கள், காய்ந்த மகிழம் பூ, கார்போக அரிசி, வசம்பு, ஆரஞ்சுப் பழத்தோல், காய்ந்த மரிக்கொழுந்து, கோரைக்கிழங்கு, நிழலில் உலர்த்தி காய வைத்த வேப்பிலை இலைகள், துளசி, குப்பைமேனி இலைகள், வெந்தயம், கஸ்தூரி மஞ்சள் (ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் தவிர்த்து விட வேண்டும்), எலுமிச்சைப் பழத்தோல், ஜாதிக்காய் ஆகிய 20 பொருள்களை நன்றாக உலர்த்தி எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒருவேளையாவது பொடியைப் பயன்படுத்தி குளிப்பது நல்லது. இதனால் சருமம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இதனை ஃபேஸ் பேக்காகவும் போட்டுக் கொள்ளலாம். அதற்கு, 1 தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக் கொண்டு இதனுடன் 1 தேக்கரண்டி தக்காளி சாறோ அல்லது உருளைக்கிழங்கு சாறோ அல்லது எலுமிச்சைச் சாறோ அல்லது தயிரோ அல்லது பன்னீரோ சேர்த்து கலந்து கொள்ளலாம். முகம், கழுப்த்து பகுதிகளில் போட்டு 10-20 நிமிடம் காயவிட்டு, பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இது சருமத்தை பாதுகாப்பதோடு, வறட்சியிலிருந்தும் பாதுகாக்கும். மேலும் நிறத்தையும் மேம்படுத்தும்.

அதுபோன்று, சிலருக்கு வெயில்காலம் தொடங்கிவிட்டாலே வேர்க்குரு வந்து அதிகமாக அவதிப்படுவார்கள். அவர்கள், இந்தப் பொடியை தேவையான அளவு எடுத்து, அதனுடன் வெள்ளரிக்காய் சாறோ, சுரைக்காய் சாறோ அல்லது வேறு நீர்க் காய்களின் சாறோவிட்டு வேர்க்குருவின் மீது தடவி வந்தால் வேர்க்குருவை நன்கு கட்டுப்படுத்தும். வேர்க்குருவினால் ஏற்படும் அரிப்புகளையும் கட்டுப்படுத்தும். முகப்பருவையும் கட்டுப்படுத்தும்.

இந்தப் பொடியை பயன்படுத்தி குளிப்பதனால், சூரிய ஒளியினால், சருமம் கருமையாக மாறுவதை தடுக்கும். மேலும், கோடையில் ஏற்படும் சரும தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்து உடல் சூட்டை தணிக்கும். வேர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கி, உடலை நறுமணத்துடன் வைக்கும். அதனால், முடிந்தவரை இரண்டு வேளை இந்த இயற்கை மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி குளிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால், பெரும்பாலான சரும பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மேலே சொன்ன மூலிகை பொருள்கள் எல்லாம் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அரைத்து வைத்துக் கொண்டால், குடும்பத்தில் உள்ள அனைவருமே பயன்படுத்தி பலன் பெறலாம்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

The post கோடையில் சருமத்தைக் காக்க… appeared first on Dinakaran.

Tags : Kumkum Doctor ,Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்