×

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எதிரொலி போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்த நெல்லை மாநகரம்-கலெக்டர் அலுவலக சாலையும் தப்பவில்லை

நெல்லை : பள்ளிகள் திறப்பு காரணமாக நெல்லை மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காவல் வாகனத்திற்குள் மரக்கிளை புகுந்ததால், கலெக்டர் அலுவலகச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பையொட்டி நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம். பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் பெட்டி படுக்கைகளோடு நேற்று வாகனங்களில் படையெடுத்து வந்ததால், மாநகர சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக பாளை குலவணிகர்புரம் பகுதியில் சமீபத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை பள்ளிகள் திறப்பு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியை கடக்க முடியாமல் அங்குமிங்கும் வேன்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் தவித்தன. சாலையின் குறுக்கே சிலர் செல்ல முயன்றதால், வாகனங்கள் தேங்கி கிடந்தன. இதேபோல் பாளை திருவனந்தபுரம் சாலை, பாளை மைய நூலக சாலை, கதீட்ரல் பேராலய சாலை உள்ளிட்ட சாலைகளும் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின.

நெல்லை டவுனில் கல்லணை பள்ளி சாலை, நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. நேற்று பள்ளிகள் முடிந்த நேரத்தில் மாலை 4.30 மணியளவில் வஉசி மைதானம் அருகே வாகனங்கள் முழுமையாக ஸ்தம்பித்து நின்றன. பள்ளிகள் முன்னே நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வாகனங்களை சில இடங்களில் சரி செய்ய முயன்றும், வாகன பெருக்கத்திற்கு முன்பாக போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடக்கும்போது, போராட்டக்காரர்களை கைது செய்து ஏற்றி செல்ல வந்த வாகனம், மரக்கிளைகளுக்குள் சிக்கி கொண்டது. இதனால் வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. கொக்கிரகுளம் சாலையில் அங்குமிங்கும் வாகனங்கள் தேங்கி நின்றன. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வாகனத்தின் மேல் ஏறி மரக்கிளைகளை வளைத்து வாகனம் வெளியே செல்ல உதவினர். நெல்லை மாநகரில் வாகன நெருக்கடி அதிகமுள்ள பள்ளிகள் முன்பு கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.

பஸ் நிறுத்தம் தோறும் போலீசார்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நேற்று ஒவ்வொரு பஸ் நிறுத்தம் தோறும் ஒரு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் பஸ்களில் இறங்கிய பயணிகள் சிரமமின்றி செல்லவும், பேருந்து நிறுத்தங்கள் முன்பாக பஸ்கள் தேங்காமல் இருக்கவும் போலீசார் பார்த்து கொண்டனர்.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எதிரொலி போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்த நெல்லை மாநகரம்-கலெக்டர் அலுவலக சாலையும் தப்பவில்லை appeared first on Dinakaran.

Tags : Paddy City Collector ,Office ,Road ,Paddy ,Nedle City ,Paddy City- ,Collector ,Office Road ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள்...