×

கோடையை கொண்டாட வரும் பயணிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பு பணியால் இடையூறு-பொதுமக்கள் கடும் அதிருப்தி

ஊட்டி : கோடை சீசன் களைகட்டியுள்ள தற்போது ஊட்டி நகரில் பாதாள சாக்கடை கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருவது, உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, மாதங்களில் கோடை சீசன் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்படும். இந்த சமயத்தில் கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிவார்கள்.
இந்த சூழலில் தற்போது ஊட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், குளு குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள இச்சமயத்தில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய சாலைகளில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எட்டின்ஸ் சாலையையும், கமர்சியல் சாலையையும் இணைக்கும் சாலையில் கேசினோ சந்திப்பில் இருந்து அலங்கார் தியேட்டர் சந்திப்பு செல்லும் சாலையில் கணேஷ் தியேட்டர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

இதனால் மணிக்கூண்டு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கமர்சியல் சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் பிரீக்ஸ் பள்ளி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் பழைய டிபிஓ சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். ஆகவே கமர்சியல் சாலையில் கேசினோ சந்திப்பில் இருந்து இருபுறமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோடையை கொண்டாட வரும் பயணிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பு பணியால் இடையூறு-பொதுமக்கள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...