×

அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை சேர்க்கக்கூடாது: போலியான உத்தரவாதம் தரக்கூடாது; தனியார் பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

புதுடெல்லி: நுழைவு தேர்வுகளால் அதிகரிக்கும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு தனியார் பயிற்சி மையங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுத்து பயில விரும்பும் துறையாக மருத்துவமும், பொறியியலும் உள்ளன. இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வும், பொறியியல் படிப்புக்கு ஜெஇஇ நுழைவு தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெற்றி பெற்றால்தான் மருத்துவம், பொறியியல் பயில முடியும் என்பதால் நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் பெருகி உள்ளன.

இந்நிலையில் தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குப்படுத்தவும், பெருகி வரும் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டுள்ளது. இதில், “16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்கக் கூடாது. மேல்நிலை பள்ளி தேர்வுக்கு பிறகு தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். பட்டப் படிப்பை விட குறைந்த கல்வி தகுதியுடைய ஆசிரியர்களை எந்தவொரு பயிற்சி நிறுவனமும் பணியமர்த்த கூடாது.
பயிற்சி மையங்களில் சேர்ப்பதற்காக மாணவர்களுக்கு தவறான, போலியான உத்தரவாதங்களை அளிக்க கூடாது.

பயிற்சி மையங்களின் தரவரிசை, நல்ல மதிப்பெண்களை பற்றி பெற்றோர்களுக்கு உத்தரவாதம் அளிக்க கூடாது. படிப்புகள், பாடத்திட்டங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரசீதுகள் தரப்பட வேண்டும். பயிற்சி நிறுவன ஆசிரியர்களின் கல்வி தகுதி, அதில் கற்று தரப்படும் படிப்பு, பாடத்திட்டங்கள், பயிற்சி நிறைவடையும் காலம், விடுதி உள்ளிட்ட வசதிகள் மற்றும் வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய இணையதளம் நிச்சயம் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை சேர்க்கக்கூடாது: போலியான உத்தரவாதம் தரக்கூடாது; தனியார் பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Ministry of Education ,India ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...