×

துணை மின்நிலைய அலுவலகத்திற்கு தாம்பூல தட்டுடன் வந்தவரால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி துணை மின் அலுவலகத்தில் மின் மீட்டரை பொருத்த தாம்பூல தட்டுடன் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இதே பகுதியில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், லோகநாதன் வசிக்கும் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார். அதற்கு மின் இணைப்பு வேண்டி 2 மாதங்களுக்கு முன்பு முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை கட்டி ரசீது வைத்துள்ளார். ஒரு மாதங்களாகிய நிலையில் மின் இணைப்புக்கான பதிவு எண் மட்டும் வந்துள்ளது. ஆனால், மின் மீட்டர் பொருத்தப்படவில்லை. இது சம்பந்தமாக லோகநாதன் பலமுறை கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் தகுந்த பதில் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் லோகநாதன் தாம்பல தட்டுடன் மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் \”யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கூறினீர்கள் என்றால் அவர்களுக்கு பணம் செலுத்த நான் வந்துள்ளேன். பின்பு, நீங்கள் மீட்டரை பொருத்துங்கள்\” என கண்டன வாசகங்களுடன் கழுத்தில் தொங்கவிடப்பட்டு அதிகாரிகளிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக மின் மீட்டரை பொருத்தியுள்ளனர். இந்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் ஏரியா லைன் மேன்கள் வரை பணமில்லாமல் வேலை செய்ய மறுக்கின்றனர்.

ஆனால், வசதி படைத்த சூப்பர் மார்க்கெட், பெரிய நிறுவனங்களுக்கு வேகமாக பணிகளை. பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்கின்றனர். ஏழை, எளிய மக்கள் குடிசை வீடு மற்றும் காங்கிரீட் வீடுகளில் மின் சம்பந்தமான பிரச்னைகளை கூறினால் தாமதப்படுத்துகின்றனர். இந்த துணை மின் நிலையத்தில் ஏற்கனவே ஒரு மின் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார். எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் உடனடியாக கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post துணை மின்நிலைய அலுவலகத்திற்கு தாம்பூல தட்டுடன் வந்தவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு