×

கொடுவா மீன் வளர்ப்புக்காக குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கொடுவா மீன் வளர்ப்புக்காக குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன் வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான உவர்நீரில் கொடுவா மீன் வளர்பதற்கு புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டர் உவர் நீரில் கொடுவா மீன் வளர்ப்பிற்காக புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த தொகை ரூ.14 லட்சத்தில், பொது பயனாளிக்கு 40 சதவீத மானியமாக ரூ.5.60 லட்சம் மற்றும் பட்டியல் இன பயனாளிக்கு 60 சதவீத மானியமாக ரூ.8.40 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி மூப்பு நிலை அடிப்படையில் தகுதியான பயனாளிக்கு பணி ஆணை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 5, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி. மற்றும் 044 – 27972457 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post கொடுவா மீன் வளர்ப்புக்காக குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி...