×

மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது: நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள்

சென்னை: மாணவர்கள் எந்தவிதமான போதை பழக்கத்திற்கும் அடிமையாக கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘சிற்பி’ நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற ‘சிற்பி’ நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிற்பி திட்டத்தை சென்னை காவல்துறை திட்டமிட்டது. நான் தொடங்கி வைத்தேன். நன்றாக படிக்கின்ற மாணவர்கள், ஒழுக்கத்திலும் – நேர்மையிலும் – துணிச்சலிலும் – சமூக பொறுப்பிலும் – சிறந்தவர்களாக உருவாக்க நம்முடைய சென்னை மாநகரத்தின் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த திட்டத்தை வடிவமைத்தார்.

சென்னை மாநகரில் இருக்கக்கூடிய 100 அரசு பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்குபெறக்கூடிய வகையில் இது திட்டமிடப்பட்டது. 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக இன்றைக்கு உருவாகி இருக்கிறீர்கள். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 5000 சிற்பி மாணவர்கள் சென்னை எழும்பூர் முதல் வண்டலூர் வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.

இயற்கையை பேணும் விதமாக ஐந்தாயிரம் குழந்தைகளும் ஐந்து லட்சம் விதை பந்துகள் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல், ஐந்தாயிரம் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறீர்கள். 74-வது குடியரசு நாள் விழாவில், சிற்பி மாணவர் படையினராக அணிவகுப்பில் கலந்து கொண்டது அதுவும் மிடுக்கான நடையில் என்னை மிகவும் வியப்படைய வைத்தது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது.

என்னை பொறுத்தவரை, மாணவர்களை தரமான ‘மனிதர்களாக’ உருவாக்குதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கின்ற திட்டமாக இது அமைந்திருக்கிறது. இதனுடைய பயன், தலைமுறை தலைமுறைக்கு நிச்சயமாக தொடரும். 100 விழுக்காடு படிப்பறிவு என்பதை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியை கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக, கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். இங்கே வந்திருக்கின்ற உங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். பள்ளியோடு கல்வியை நிறுத்திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள். சமூகத்தைப் படியுங்கள். அந்த கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள். புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள்.

படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து. உங்களுடைய படிப்பையும் திறமையும் பார்த்து, பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். உங்களோட மற்ற கவலைகளை போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் இருக்கேன். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு போதை ஒழிப்பு நாள். அதனால் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்தவிதமான போதை பழக்கத்திற்கும் நீங்களும் அடிமையாக கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள்.

உங்களை சுற்றியிருகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது, போதை என்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் அது மிக, மிக கேடு. அதனை புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே. மாணவ கண்மணிகளே, நீங்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, நம்பிக்கை கொண்டவர்களாக, நீதியில், நேர்மையில் உறுதிகொண்டவர்களாக திகழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா, எம்எல்ஏ பரந்தாமன், உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது: நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள் appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stal ,Chennai ,Chennai Metropolitan Police ,Chief Minister ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு