×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி: மாநகராட்சி நடவடிக்கை

திருவொற்றியூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் மாநகராட்சி சார்பில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரம், 4 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் 3,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே 2 நாட்களுக்கு முன், ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இந்தியாவில் 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றை விட 20 சதவீதம் அதிகம். குறிப்பாக, மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ‘வீட்டு தனிமை’யில் இருப்பதை உறுதி செய்ய சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

The post கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, ,Chennai ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...