×

மாநிலம் முழுவதும் குத்தகைக்கு விட்டுள்ள சொத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்: வருவாய் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, குத்தகை விவரங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டுக்கான குத்தகை காலம் 2008ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, வாடகையை அரசு ரூ.36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் நிர்ணயித்தது. வாடகையை செலுத்தாவிட்டால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று 2015ல் மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் 2015ம் தொடர்ந்து வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்த பின் அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தாமல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில் 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி பாண்டியன் ஹோட்டல் நிர்வாகம் அதிக லாபம் அடைந்துள்ளது. எனவே, அந்த நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

நிதி நெருக்கடி உள்ளதாக அரசு கூறும் நிலையில், அரசு நிலங்கள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி அரசு நிலத்தை மீட்க வேண்டும். அந்த நிறுவனம் தரவேண்டிய வாடகை பாக்கியை கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க வேண்டும். வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துக்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநில, மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக வருவாய் துறை செயலாளருக்கும், நில நிர்வாக ஆணையருக்கும் உத்தரவிட்டார்.

The post மாநிலம் முழுவதும் குத்தகைக்கு விட்டுள்ள சொத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்: வருவாய் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,ICourt ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு