×

இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

சென்னை: இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில், பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் மற்றும் சங்கமம் யுகே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: இலங்கையில் நிலவும் பிரச்னை, ஒரு வருட அல்லது பத்து வருடப் பிரச்னை அல்ல. சுமார் 80-85 வருடங்களாக தொடரும் பிரச்னை. 1987ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 2009ம் ஆண்டு, வரலாற்றிலேயே மிக துயரமான ஆண்டாக அமைந்தது.

அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் அரசு. தனது கடமைகளிலிருந்தும், இலங்கைப் போரை தடுக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு. 2014ம் ஆண்டிற்கு பிறகே, பிரதமர் மோடி, இலங்கை தமிழ்மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இந்தியாவும் இலங்கையும் நாகரிக இரட்டை நாடுகள் என்று கூறிய முதல் இந்திய தலைவர் பிரதமர் மோடிதான். இலங்கையின் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை மனமார உணர்ந்திருந்தார்.

கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். சமீபத்தில் பொருளாதாரப் பாதிப்படைந்த இலங்கைக்கு, 3.8 பில்லியன் டாலர் அளவிலான கடனுதவி, 40000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவுப் பொருட்கள் என உதவி, இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியது பிரதமர் மோடி அரசு. இலங்கையின் வடகிழக்கு பகுதியின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.

இலங்கை வடகிழக்கு யாழ்ப்பாணப் பகுதிக்கும், மலையக பகுதிக்கும் சென்ற முதல் பிரதமர் மோடி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ம் சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்று பிரதமர் மோடி, இலங்கை பயணத்தின்போது வலியுறுத்தினார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த ஆண்டு இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை பிரதமரிடம், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். தமிழக பாஜ சார்பிலும், இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sri Lanka ,BJP ,State ,President Annamalai ,CHENNAI ,President ,Annamalai ,Britain ,
× RELATED இலங்கை கடற்படையால் தமிழ்நாடு...