×

தென் மண்டலம் சாம்பியன்

பெங்களூரு: மேற்கு மண்டல அணியுடனான துலீப் டிராபி பைனலில், 75 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் மண்டலம் 213 ரன் ரன் எடுத்த நிலையில், மேற்கு மண்டலம் 146 ரன்னுக்கு சுருண்டது. 67 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் மண்டலம் 230 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஹனுமா விஹாரி அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ரிக்கி, வாஷிங்டன் தலா 37, மயாங்க் அகர்வால் 35, சச்சின் பேபி 28, விஜய்குமார் 23 ரன் எடுத்தனர். மேற்கு தரப்பில் தர்மேந்திரசிங் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு மண்டலம், 4ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்திருந்தது (62.3 ஓவர்). கை வசம் 5 விக்கெட் இருக்க, இன்னும் 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலுடன் மேற்கு மண்டலம் நேற்று கடைசி நாள் சவாலை எதிர்கொண்டது.

கேப்டன் பிரியங்க் பாஞ்ச்சால் 92 ரன், அதித் சேத் (0) இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரியங்க் 95 ரன் எடுத்து (211 பந்து, 11 பவுண்டரி) கவெரப்பா வேகத்தில் விக்கெட் கீப்பர் ரிக்கி புயி வசம் பிடிபட்டார். தர்மேந்திர சிங் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். மேற்கு மண்டலம் 84.2 ஓவரில் 222 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தென் மண்டல பந்துவீச்சில் வாசுகி கவுஷிக், சாய் கிஷோர் தலா 4, கவெரப்பா, விஜய்குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 75 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டல அணி துலீப் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வித்வத் கவெரப்பா தட்டிச் சென்றார்.

The post தென் மண்டலம் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : South Zone ,Bengaluru ,Duleep Trophy ,West Zone ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!