×

பயணிகள், சரக்கு போக்குவரத்து மூலம் தெற்கு ரயில்வேக்கு ₹7,906 கோடி வருவாய் : கடந்த நிதியாண்டை விட அதிகம்

சேலம் : தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த 9 மாதத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் ₹7,906 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை விரும்பும் மக்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி கணிசமான வருவாயை ஈட்டி வருகிறது. அதேபோல், முக்கிய நகரங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்தையும் கடந்த காலங்களை விட தற்போது மிக அதிகளவு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலமும் அதிகபடியான வருவாயை ரயில்வே ஈட்டுகிறது.

இந்தவகையில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் இருக்கும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் சரக்கு போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்த 6 கோட்டங்களிலும் வணிக மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் சரக்குகள் கையாளப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இதனால், எப்போதும் இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நடப்பு நிதியாண்டில் (2023-24) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் 29.351 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இதன்மூலம் ₹2,651 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டின் (2022-23) இதேக்காலக்கட்டத்தில் கையாளப்பட்ட சரக்கை விட 6 சதவீதம் அதிகமாகும். அதாவது கடந்த நிதியாண்டில் முதல் 9 மாதத்தில் 27.660 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டிருந்தது. நடப்பாண்டு அதை விட 3.241 மில்லியன் டன் சரக்கு கூடுதலாக கையாளப்பட்டுள்ளது.

இதேபோல், பயணிகள் ரயில் போக்குவரத்தில் நடப்பு நிதியாண்டில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் அதிகப்படியான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், எப்போதும் இல்லாத அளவிற்கு பயணிகள் ரயில் போக்குவரத்து மூலம் மிக அதிகப்படியான வருவாய் கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் (2023-24) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதத்தில் 528 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களின் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ₹5,254.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேக்காலக்கட்டத்தில் கடந்தாண்டு 468 மில்லியன் பயணிகள் பயணித்திருந்தனர். அப்போது ₹4,689.46 கோடி வருவாய் கிடைத்திருந்தது. அதை விட நடப்பாண்டு 12.1 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து மூலம் ₹7,906 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் 9 மாத வருவாயை விட அதிகமாகும். இந்த நிதியாண்டு வரும் மார்ச் மாதம் நிறைவடையும்போது, கடந்த காலங்களை விட மிகப்பெரிய அளவில் வருவாய் கிடக்கும் என எதிர்பார்த்துள்ளோம்,’’ என்றனர்.

The post பயணிகள், சரக்கு போக்குவரத்து மூலம் தெற்கு ரயில்வேக்கு ₹7,906 கோடி வருவாய் : கடந்த நிதியாண்டை விட அதிகம் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Salem ,Southern Railway Authority ,Dinakaran ,
× RELATED நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்