×

பனிப்பொழிவால் வாடிவதங்கும் தக்காளி செடிகள்: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி செடிகள் வாடி வதங்குகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில், தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், தக்காளி சாகுபடி என்பது, பல்வேறு கிராமங்களில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், விளைச்சலுக்கேற்ப விலையில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும், தக்காளி சாகுபடி மேற்கொள்வதை தொடர்ந்துள்ளனர். இதில் வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர் புதூர் மற்றும் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். இங்கு ஒவ்வொரு பருவ மழையின் போதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில், கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. நல்ல விளைச்சலடைந்த தக்காளிகள் கடந்த அக்டோபர் மாதம் அறுவடை செய்யப்பட்டது. இதனால், அந்நேரத்தில் ஒரு மாதமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததுடன், விலையும் கடுமையாக சரிந்தது. இந்நிலையில், ஜூலை மாதம் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி பல கிராமங்களில், இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஈடுபட்டனர். இருப்பினும், வடகிழக்கு பருவமழை குறைவாக இருந்தாலும், விளை நிலங்களில் ஈரப்பதம் தொடர்ந்து அதிகமானது. மேலும், பாசனத்துக்கு தேவையான தண்ணீர் அணைகளிலிருந்து கால்வாய் வழியாக திறக்கப்படுவதால், அந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி மேற்கொண்டனர். இதில் தக்காளி சாகுபடியே அதிகமாகியுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் தற்போது நல்ல விளைச்சலடைய துவங்கியுள்ளது. இதற்கிடையே, கடந்த சில வாரமாக மாலையில் துவங்கும் பனிப்பொழிவு காலை வரை நீடிப்பது மட்டுமின்றி, சில நேரத்தில் பகல் நேரத்திலும் பனிப்பொழிவால், பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள், பனிப்பொழிவுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் செடியிலேயே வாடி வதங்கிய நிலையில் உள்ளது. சில கிராம பகுதியில், தக்காளி செடிகள் கருகிய நிலையில் உள்ளது. தக்காளி விளைச்சல் ஓரளவு இருந்தாலும், பனியால் தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளதால், தற்போது மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான தக்காளிகள் வெடித்த நிலையில் உள்ளது. சில கிராமங்களில், செடியிலேயே வாடி வதங்கி பழுத்த தக்காளிகளை விவசாயிகள் பறிக்காமல் அப்படியே விட்டு விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு இன்னும் சில வாரத்திற்கு இருக்கும் என்ற நிலையில் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post பனிப்பொழிவால் வாடிவதங்கும் தக்காளி செடிகள்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,
× RELATED வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு