×

சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சாண்ட்வெஜ்

இன்றைய காலகட்டத்தில் எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும், எப்போதும் கிடைக்கக்கூடிய ஓர் டிஷ் என்றால் அது கேக் அன்ட் பிரட்ஸ்தான். பல நாடுகளில் பிரட்டும், கேக்கும் மூன்று வேளை உணவாகவே உள்ளன. அதேபோல, உலக அளவில் பல வகையான உணவுகளைத் தயாரிக்க பிரட்தான் ரா மெட்டீரியல். கேக், பிரட் பற்றி இன்னும் பல விசயங்களை அடுக்கலாம். நம்ம ஊரைப் பொருத்தவரை கேக், பிரட் வாங்க ரெஸ்டாரன்ட்க்குத்தான் செல்வோம். ஆனால், இப்போது நமது வீட்டிலேயே செய்து சாப்பிடும் டிஷ்ஷாக இது மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் பெண்களும் கூட இந்த கேக், பிரட்ஸ்ஸை தயாரித்து வீட்டில் இருந்த படியே இணையத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தபடி கேக், பிரட்ஸ் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தவர்தான் ஹிஷ்மா பாத்திமா. இப்போது அவர் ஒரு படி மேலே சென்று, ‘தி மெட்ராஸ் நீட்ஸ்’ என்ற பெயரில் பேக்கரியைத் தொடங்கி இருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பின்புறம் அமைந்திருக்கும் இந்த கேக் ஷாப்பில் கொரியன் பன், லோட்டஸ் பாப்கா, பிஸ்தா பாப்கா, க்ரொஷன்ட்ஸ் என பிரபலமான கேக் வகைகள் எல்லாம் கிடைக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் கிடைக்கும் ஐஸ்கிரீம் சான்ட்வெஜ், பல நட்சத்திர உணவகங்களில் கிடைக்கும் வெரைட்டி கேக்ஸ் என பல ஸ்பெஷல்கள் நிறைந்திருக்கின்றன.

சிங்கப்பூர் மட்டுமில்லாமல் பல நாடுகளில் கிடைக்கும் பல வெரைட்டி கேக் அன்ட் பிரட்ஸை சென்னைக்கு முதன்முதலாக கொண்டு வந்திருக் கிறார் ஹிஷ்மா பாத்திமா.அவரை சந்தித்தபோது, ‘‘பிறந்தது படித்தது எல்லாமே சென்னைதான். எனக்கு சின்ன வயசுல இருந்தே கேக் செய்யணும், அத எல்லோருக்கும் சாப்பிடக் கொடுக்கணும்னுதான் ஆசை. அந்த ஆசைதான், பேக்கரி செட்டப்ல ஒரு கடைய திறக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கு’’ என்று பேசத்தொடங்கினார்.‘‘ கேக் தயாரிப்பு சார்ந்து படிக்கணும்னுதான் ஆசை. ஆனா, இன்டீரியர் டிசைனிங்தான் படிச்சேன். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே கேக் செய்யத் தொடங்கிட்டேன். ஆரம்பத்தில் வீட்டில் இருக்கிறவங்களுக்கு சாப்பிட செஞ்சு கொடுத்துட்டு இருந்தேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அதையே விற்பனையாக்கலாம்னு நினைத்து வீட்டில் இருந்தபடியே எனது விற்பனையைத் தொடங்கினேன். கடந்த 8 வருசமா இந்த கேக் தயாரிப்பிலும், அதை விற்பனை செய்வதுமா இருந்தேன். இவ்வளவு நாட்களாக வீட்டில் இருந்தபடியே டன்சோ மூலம் டெலிவரி செய்து வந்தேன். ஆனால் ஆர்டர்கள் அதிகம் வந்ததால என்னால் வீட்டில் இருந்தபடி எல்லாருக்கும் கொடுக்க முடியல. அதனால தொடங்கப்பட்டதுதான் இந்த ‘தி மெட்ராஸ் நீட்ஸ்’. சின்ன வயசில் கேக் செய்றதில அதிக ஆர்வம் இருந்தபோதும், போகப்போக பிரட் தயாரிப்பிலும் ஆர்வம் வந்துச்சு.

வெளிநாடுகள்ல பிரட்தான் பிரதான உணவு. அத்தகைய பிரட்டை பல வெரைட்டில, குறிப்பா சென்னைல எங்கேயும் இல்லாத சுவையில் வெரைட்டியா கொடுக்கணும்ன்னு பிரட் கேக் தயாரிப்புக்கான டிரைனிங் கிளாஸ் போனேன். சென்னை, பெங்களூர்னு எல்லா இடத்திலயும் கேக் பிரட் தயாரிப்புகளை முறைப்படி கத்துக்கிட்டேன். கத்துக்கிட்ட எல்லாத்தையும் அன்னைக்கே வீட்டில் வந்து செஞ்சு பாப்பேன். அது சரியான சுவைல, அந்த அளவுல வர்றது வர செஞ்சு பாப்பேன். அப்படித்தான் எல்லா பிரட்டையும் செய்ய கத்துக்கிட்டேன். பிரட் என்றால் நம்ம ஊர்ல கிடைக்கிற பிரட் மட்டுமில்ல, கொரியன் பிரட், ப்ரான்ஸ்ல கிடைக்கக் கூடிய பிரட், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் இப்படி பல நாட்டில கிடைக்கக் கூடிய பிரட்டை ஒரே இடத்துக்கு கொண்டு வந்திருக்கேன். அதுதான் என் ஆசையும் கூட. இந்த மாதிரி பேக்கரி ஸ்டைல்ல வெரைட்டி பிரட்ஸ் கொடுக்கணும்ங்குறது ஆசை மட்டுமில்ல, அது என்னோட பேஷனும் கூட. கேக்கோட சுவை, கேக்கோட வடிவம் இதெல்லாம் நல்லா செஞ்சா மட்டும் வந்திடாது. கேக் தயாரிப்புக்கான பொருட்களில் எந்த கலப்படமும் இல்லாமல், முதல்தரமான பொருட்களை வாங்கணும். அதில் செஞ்சாதான் இந்த சுவை வரும். அதனால மைதால இருந்து பட்டர் வரை எல்லாமே ஹை காஸ்ட்லியாதான் வாங்குறேன்.

மாதத்திற்கு அமுல் பட்டர் மட்டும் 40 கிலோ வாங்கிடுவேன். அதேபோல, இங்க இருக்கிற மைதாவில் பிரட்டோட சுவை கொஞ்சம் கம்மியா இருந்தது. கீழக்கரை ராம்நாடுல புரோட்டா நல்லா இருக்கும். அதனால், அங்க இருக்கிற மைதாவில் பிரட் செஞ்சு பாத்தேன். சுவையும் வடிவமும் ரொம்ப யூனிக்கா இருந்தது. அதனால் மைதாவை அங்க இருந்துதான் வாங்குறேன். சாக்லேட்லாம் கூட காஸ்ட்லிதான். அப்படி கொடுத்தாதான் நம்ம தயாரிப்போட சுவை தனியா தெரியும். நம்ம கடையோட ஸ்பெஷல்னா அது சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சான்ட்வெஜ்தான். சிங்கப்பூர்ல இது ரோட் சைட் டிஷ். அங்க எல்லா இடத்திலயும் கிடைக்கும். ஆனா, நம்ம ஊர்ல இது பெரிய ரெஸ்டாரன்ட்ல கூட கிடைக்காது. சிங்கப்பூர்ல நான் சாப்பிட்டு பாத்து இதை நம்ம ஊருக்கு கொடுக்கனும்னு சென்னை மக்களுக்கு அறிமுகப் படுத்தி இருக்கேன். இது செய்வதற்கான பிரட்டை பாக்கவே ரொம்ப அழகா இருக்கும். அந்த பிரட்ல ரெயின்போ கலர்ஸ் கொண்டுவந்து அதுக்குமேல ஐஸ்கிரீம் வச்சு நட்ஸ், சாக்கோ கிரீம், சாக்லேட் எல்லாம் சேத்து, திரும்ப அத இன்னொரு பிரட்ல மூடி சான்ட்வெஜ் ஸ்டைல்ல கொடுப்போம். பாக்கவே கலர்புல்லா இருக்கும். அதுதான் எங்க கடையோட ஸ்பெஷல். பிரான்ஸ் நாட்டில் காலை உணவாக சாப்பிடக்கூடிய பிரட்தான் க்ரொசன்ட்.

அதை செய்வதற்குத்தான் அதிக நேரம் எடுக்கும். அதேபோல, அதன் செய்முறைய கத்துக்கிறதுக்கு மட்டும் 5 தடவை கோச்சிங் கிளாஸ் போனேன். ஏன்னா, க்ரொசன்ட் செய்வது ரொம்பவும் கஷ்டம். அதுவும் வீட்ல தயாரிக்கிறது கொஞ்சம் சவாலா இருக்கும். ஏன்னா, க்ரொசன்ட் செய்யும்போது அதுக்குள்ள பட்டர் வச்சு ரோல் பண்ணுவோம். அப்படி ரோல் பண்ணும்போது பட்டர் உடையாம பாத்துக்கணும். க்ரொசன்ட்ல மல்டிபில் லேயர் வரும். அதனால் அது தயாரிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஆனா, இப்ப அதுவும் ஈஸியா செய்ய வருது. இந்த க்ரொசன்ட்ல மட்டுமே பல வெரைட்டி இருக்கு. சாக்லேட் க்ரொசன்ட், பாதாம் க்ரொசன்ட், ஸ்ட்ராபெரி க்ரொசன்ட் இப்படி பல நட்ஸ்ல, பல வெரைட்டில இத தயாரிக்கலாம். இது எல்லாமே நம்ம மெட்ராஸ் நீட்ஸ்ல கிடைக்கும்.இது எல்லாத்தையும் வீட்லயே தயாரிக்கிறதால நான் ஒரு ஆளே பண்ண முடியல. அதனால, எனக்கு துணையாக வேலைக்காக சில பெண்களை சேர்த்துக்கிட்டேன். வீட்டு வேலைக்காக அவங்க வந்தாங்க. இப்ப அவங்களுமே கூட கேக் பிரட் தயாரிக்க கத்துக்கிட்டாங்க. வீட்ல வேலைக்கு இருக்கிற யாருமே படிச்சவங்க இல்ல. ஆனா, இப்ப அவங்களுக்குன்னு ஒரு தொழில நான் கத்துக்கொடுத்துருக்கேன். அவங்களுமே அதை ரொம்ப பொறுமையா கத்துக்கிட்டு இப்ப நான் இல்லைனா கூட அவங்களே எல்லாத்தையும் செஞ்சுடுற அளவுக்கு ட்ரைனிங் ஆகி இருக்காங்க. கஸ்டமர்ஸ்க்கு பிடித்த வகையில் இன்னும் என்னென்ன பிரட்ஸ் இருக்கோ அது எல்லாத்தையும் கொண்டு வரணும். அதுதான் என்னோட ஆசை’’ என பேசி விடை கொடுத்தார்.

– ச.விவேக்
படங்கள்: ஆ. வின்சென்ட் பால்

ஐஸ்கிரீம் சாண்ட்வெஜ்

தேவையான பொருட்கள்:

ரைன்போ பிரட் – 2
நட்ஸ் – தேவையான அளவு
ப்ரவ்னி சாக்லேட் – தேவையான அளவு
ஜெம்ஸ் சாக்லேட் – தேவையான அளவு
சாக்கோ கிரீம் – தேவையான அளவு
ஐஸ்கிரீம் – சிறிதளவு.

செய்முறை:

ஐஸ்கிரீம் சாண்ட்வெஜ் செய்வதற்காக எடுத்து வைத்திருக்கும் பிரட்டை இரண்டாக வெட்டி அதன் நடுவில் ஐஸ்கிரீமை வைக்க வேண்டும். பின்னர் ஐஸ்கிரீமின் மீது சாக்கோ கிரீம் தடவ வேண்டும். பிறகு, நட்ஸ், சாக்லேட், ஜெம்ஸ் ஆகியவற்றை அதன்மீது வைத்து, நறுக்கிய இன்னொரு பிரட் துண்டை வைத்து இதை மூட வேண்டும். இப்போது இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவே ஐஸ்கிரீமும், அதற்குத் தேவையான நட்ஸ் அன்ட் சாக்லேட்டுகள் இருக்கும். இதை அப்படியே மொத்தமாக கடித்து சாப்பிட்டால் டேஸ்டோ டேஸ்ட்.

The post சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சாண்ட்வெஜ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சாபங்களும் தோஷங்களும் ஏன்?