×

சில்லி பாயின்ட்…

* தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் முதல் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டி இன்று முதல் நாளை மறுநாள் வரை சென்னையில் கிண்டி, வேளச்சேரி, தரமணி உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. தினமும் காலை 9 மணிக்கு ஆட்டம் தொடங்கும். குளோப் ட்ராட்டர்ஸ் எஸ்சி – இந்தியா பிஸ்டன் சிசி, கிராண்ட் ஸ்லாம் சிசி – ஆழ்வார்பேட்டை சிசி, சீ ஹாக்ஸ் சிசி – யங் ஸ்டார்ஸ் சிசி, விஜய் சிசி – திநகர் யுஎப்சிசி, ஜாலி ரோவர்ஸ் சிசி – நெல்சன் சிசி, சிங்கம் புலி – ஜூபிடர் எஸ்சி ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களை டிஎன்சிஏ யூடியூப் சேனலில் பார்க்க முடியும்.

* இந்திய ராணுவம் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான சர்வதேச 63வது சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது. யு-17 மாணவிகளுக்கான முதல் அரையிறுதியில் ராஞ்சி மதர் இன்டர்நேஷனல் பள்ளி (ஜார்கண்ட்), பிவானி ஜிஎஸ்எஸ்எஸ் அலக்புரா பள்ளி (அரியானா) மோதின. கூடுதல் நேரத்திலும் 0-0 என சமநிலை வகித்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் ஜார்கண்ட் பள்ளி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் கிரிரா ஷிக்கா புரடிஸ்தான் பள்ளி (வங்கதேசம்), இம்பால் தி பிராம்ட் சபல் லேகய் பள்ளி (மணிப்பூர்) மோதின. அதில் வங்கதேச பள்ளி 1-0 என போராடி வென்றது. நாளை மாலை ராஞ்சியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெறும் பைனலில் ராஞ்சி மதர் இன்டர்நேஷனல் – கிரிரா ஷிக்கா மோதுகின்றன.

* இங்கிலாந்து அணி முன்னாள் பேட்ஸ்மேன் கிரகாம் தோர்ப் (55 வயது) ஆக.4ம் தேதி காலமானார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தோர்ப் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டிரினிடாடில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்ரிக்கா இடையே நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. தென் ஆப்ரிக்கா 357 மற்றும் 173/3 டிக்ளேர். வெஸ்ட் இண்டீஸ் 233 & 201/5. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆக.15ம் தேதி கயானாவில் தொடங்குகிறது.

* செப்டம்பரில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் உடனான டெஸ்ட் (செப்.9-13) டெல்லி, நொய்டாவில் நடக்க உள்ளது. அதனையடுத்து நியூசி. அணி செப்.18 -26 வரை இலங்கையில் விளையாட உள்ளது.
நியூசி அணி: டிம் சவுத்தீ (கேப்டன்), டாம் பிளெண்டல், மிக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ‘ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cricket Association ,TNCA ,Chennai ,Guindy ,Velachery ,Taramani ,Dinakaran ,
× RELATED புச்சி பாபு கிரிக்கெட்: ஜார்க்கண்ட், ரயில்வேஸ் வெற்றி