×

பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங் ஹேண்ட்பேக்!

நன்றி குங்குமம் தோழி

எந்த உடை அணிந்தாலும் அதற்கு பெஸ்ட் மேட்சிங் ஹேண்ட்பேக்தான். உடைக்கு மட்டுமில்லை, நாம் செல்லும் இடங்களுக்கு ஏற்பவும் பல டிசைன் மாடல் ஹேண்ட் பேக்குகள் உள்ளன. ஆனால் அதுவே கல்யாணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிக்கு செல்லும் போது மட்டும் நாம் அதற்கான மேட்சிங் ஹேண்ட்பேக்குகளை பயன்படுத்த தவறிவிடுகிறோம். அதற்காகவே பட்டுத்துணியில் அழகான டிசைன்களில் கண்கவர் ஹேண்ட்ேபக்குகளை வடிவமைத்து வருகிறார் திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த
ரனிதா ராஜேந்திரசிங்.

‘‘என்னுடைய சொந்த ஊர் மதுரை அருகே உள்ள விருதுநகர். அப்பா டாக்டர். அவர் ரொம்ப சேவை மனப்பான்மை கொண்டவர். வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து இருக்கிறார். அம்மா இல்லத்தரசி. ஆனால் எல்லாவிதமான கைவினை சார்ந்த பொருட்களையும் ரொம்ப அழகாக செய்வார். குறிப்பா எம்பிராய்டரி மற்றும் தையல் வேலைப்பாடுகள். என் மூன்று சகோதரர்களும் அப்பாவை போல் டாக்டராக இருக்காங்க. நான் அம்மாவின் கைத்தொழிலை என்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும் எங்க வீட்டில் எனக்கு திருமணம் செய்துட்டாங்க.

அவங்க ஊர் பாளையங்கோட்டை என்பதால் அங்கு செட்டிலானேன். நான் சின்ன வயசில் இருக்கும் போது அம்மா எனக்கு அவங்களுக்கு தெரிந்த அனைத்து கைத்ெதாழிலையும் சொல்லிக் கொடுத்தாங்க. ஜாக் ஆஃப் ஆல் டிரேட்ஸ்னு சொல்வாங்கல… அப்படித்தான் என்னை அவங்க தயார் செய்திருந்தாங்க. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு நான் முழு நேர ஹவுஸ்வைஃப்பாக மாறினேன். என் கணவர் ெசாந்தமாக தொழில் செய்து வந்ததால் வீடு, குழந்தைகள், குடும்பம் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்னுடையதானது. அதே சமயம் கிடைக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த தையல் வேலைகளை செய்வேன்.

சொல்லப்போனால் என் மகளுக்கு பெரும்பாலும் நான்தான் உடையினை தைத்து தருவேன். அதை பார்த்த என் தோழிகள் பலரும் ஒரு பொட்டிக் வைக்க சொல்லி சொன்னாங்க. எனக்கு அதில் விருப்பமில்லை. காரணம், ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் பொட்டிக் வைத்துள்ளனர். பத்தில் ஒன்றாக நான் இருக்க விரும்பவில்லை. இதற்கிடையில் என் மகனும் மகளும் படிப்பை முடிச்சாங்க. மகன் சொந்தமா பிசினசை துவங்கி அவனுக்கென்று குடும்பம்னு செட்டிலானான். மகளும் கொடைக்கானலில் திருமணமாகி சென்றுவிட்டாள். அவள் கணவரின் குடும்பத்திற்கு அங்கு சொந்தமா நட்சத்திர ஓட்டல் உள்ளது.

அது அவங்க குடும்ப தொழில் என்பதால் அவளும் குழந்தை, குடும்பம், பிசினஸ்னு பிசியாக இருந்தாள். என் கணவரும் தொழில் காரணமாக அவ்வப்போது வெளிநாட்டிற்கு செல்வது வழக்கம். இப்படி எல்லோரும் தங்களின் வேலையில் பிசியாக இருந்த நேரத்தில் நான் மட்டும் ரொம்பவே ஃப்ரீயா இருந்தேன். எனக்கான நேரத்தில் என்ன செய்யலாம்னு யோசித்த போதுதான் ‘நேஹாஸ்
பேக்ஸ்’ உருவானது’’ என்றவர் ஹேண்ட்பேக் பக்கம் இவரின் கவனம் திரும்பிய காரணம் பற்றி விவரித்தார்.

‘‘கைகளில் ஹேண்ட்பேக் இல்லாத பெண்களை பார்க்க முடியாது. பெரிய அளவில் இல்லை என்றாலும், கிளட்ச் டைப் சிறிய அளவு கைப்பைகளை அவர்கள் வைத்திருப்பார்கள். ஹேண்ட்பேக் ஒருவர் அணிந்திருக்கும் உடைக்கு பெஸ்ட் காம்ளிமென்ட் தரக்கூடியது. அதே சமயம் பட்டுப்புடவைகளுக்கு மட்டும் அதற்கு ஏற்ப கைப்பைகள் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். கல்யாணத்திற்கு வரும் பெரும்பாலான பெண்கள் பட்டாடை உடுத்திக் கொண்டு கைகளில் ஹேண்ட்பேக் வைத்திருந்தாலும், அவர்களின் உடைக்கு பொருந்தி இருக்காது. பட்டுக்கும் லெதர் பேக்குக்கும் எப்படி பொருந்தும். அழகான பட்டுப்புடவைகளுக்கு பட்டுத் துணியிலான கைப்பைகள் தான் ரைட் சாய்ஸ். பட்டுப்புடவைகளின் நிறத்திற்கு ஏற்ப கைப்பை மற்றும் ஹேண்ட்பேக்குகளை தயாரிக்க ஆரம்பிச்சேன்.

அந்த சமயத்தில் சீனப் பொருட்கள் அதிகம் விற்பனைக்கு வர ஆரம்பித்தது. சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமில்லாமல், தரம் குறைந்த ஹேண்ட்பேக்குகளும் கிடைத்தது. அந்த பேக்குகளை வாங்கி, முழுதும் பிரித்தேன். எனக்கு உடைகள் தைக்க தெரியும். ஆனால் ஹேண்ட்பேக் தைத்து பழக்கமில்லை. ஹேண்ட்பேக்குகளை எப்படி தைத்திருக்கிறார்கள் என்று பார்த்து புரிந்து கொண்டேன். எனக்கு உதவியாக மூன்று பெண்களை நியமித்தேன்.

அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். நான் தொழிலை துவங்கிய ஆறே மாசத்தில் ஓரளவு அடையாளமும் கிடைத்தது. அப்போது சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து சில்க் மார்க் குறித்த கண்காட்சி இடம் பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கண்காட்சியில் கலந்து கொள்பவர்கள் 100% பட்டுத் துணிகளை கொண்டுதான் ஹேண்ட்பேக்குகளை தயாரித்து காட்சிப்படுத்த வேண்டும். நான் தொழிலை ஆரம்பித்த போது அனைத்து விதமான மெட்டீரியலிலும் பைகளை தயாரித்து வந்தேன். சின்ன மணி பர்ஸ் முதல் டிராவல் பேக் வரை எங்களிடம் இருக்கும். அதில் பட்டுத்துணி ஹேண்ட்பேக்கும் அடங்கும். ஆனால் அதன் மதிப்பு எனக்கு அப்போது தெரியவில்லை.

ஒரு முறை என் வீட்டிற்கு பெல்ஜியம் நாட்டில் இருந்து ஒரு பெண் என் கணவரின் பிசினஸ் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு நான் தயாரித்த 50க்கும் மேற்பட்ட ஹேண்ட்பேக்கினை காண்பித்த போது, அவருக்கு கிளிப்பச்சை நிற பட் டுத்துணியால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக் மிகவும் பிடித்திருந்தது. அப்போதுதான் எனக்கு பட்டுத் துணி ஹேண்ட்பேக்கிற்கு உள்ள மதிப்பு புரிந்தது. மேலும் சென்ட்ரல் சில்க் போர்ட் கண்காட்சியிலும் எங்களின் ஹேண்ட்பேக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைச்சதால், அதன் பிறகு பட்டுத் துணியில் ஹேண்ட்பேக்குகளை அதிகமாக தயாரிக்க ஆரம்பித்தேன்’’ என்றவர் ஹேண்ட்பேக் மட்டுமில்லாமல் சல்வார் உடைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஷர்ட், ஹவுஸ்ஹோல்ட் பொருட்களையும் தயாரித்து வருகிறார்.

‘‘பாளையங்கோட்டையில் எங்களின் யூனிட் மற்றும் ஷோரூம் இரண்டுமே ஒரே கட்டிடத்தில் உள்ளது. இங்கு மட்டுமில்லாமல் கொடைக்கானல் மற்றும் மதுரையில் உள்ள என் மகளின் நட்சத்திர ஓட்டல்களிலும் சென்னையிலும் எங்களின் ஷோரூம்கள் உள்ளன. சுத்தமான பட்டு மற்றும் ஸ்பன் பட்டுகளிலும் ஹேண்ட்பேக்குகளை தயாரித்து தருகிறோம். எங்களின் தனிப்பட்ட டிசைன்கள் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் அவர்களின் புடவையின் நிறத்திற்கு ஏற்பவும் தைத்து தருகிறோம்.

சிலர் ரிட்டர்ன் மற்றும் கார்ப்பரேட் கிஃப்ட் ஆர்டர் கொடுப்பாங்க. அந்த சமயத்தில் இரவு பகல் பார்க்காமல் எல்லோரும் வேலை பார்ப்போம். என் ஒவ்வொரு ஹேண்ட்பேக்கின் சிறப்பும் அதை தைக்கும் டெய்லர்களுக்குதான் சேரும். பட்டால் தைக்கப்படும் ஹேண்ட்பேக்குகளை துவைக்க முடியாது. ஆனால் அதுவே ஸ்பன் பட்டு என்றால் அதை நன்கு துவைத்து பயன்
படுத்தலாம். இதுவரை எங்களின் பொருட்கள் மேல் வாடிக்கையாளர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்ததில்லை என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

ஹேண்ட்பேக்கில் எம்பிராய்டரி, கச் வேலைப்பாடு, ஜர்தோசி, சில்க் ரிபன், முத்து என பல தையல் வேலைப்பாடுகளும் செய்து தருகிறோம். மேலும் ஹவுஸ்ஹோல்ட் பொருட்களான குஷன் கவர், பெண்களுக்கான சல்வார் உடைகள், ஆண்களுக்கான ஷர்ட் போன்றவையும் எங்களிடம் உள்ளது.

பாளையங்கோட்டையில் இருப்பது பெரிய ஷோரூம் என்பதால், இங்கு எல்லா விதமான பொருட்களும் கிடைக்கும். அடுத்து சென்னை விமான நிலையம் மற்றும் மால்களிலும் கடையினை துவங்கும் எண்ணம் உள்ளது. என்னை பொறுத்தவரை நான் மட்டுமில்லாமல் என்னைச் சார்ந்தவர்களும் வளர வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதமான வசதியினையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான் என் ஆசை என்றார் ரனிதா.

தொகுப்பு: ப்ரியா

The post பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங் ஹேண்ட்பேக்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கிரகங்களும் பெயர்களும்…