சென்னை: பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே நடந்து வரும் கலவரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மே 4 ந்தேதி மைத்தேயி இன இளைஞர்கள் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி, இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மனிதத்தன்மையற்ற மிக மிக கொடூரமான செயல், மிகுந்த அதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளித்துள்ள இச்சம்பவம் நடந்தேறி 77 நாட்களுக்கு பிறகு வெளி உலகம் அறிய முடிகிறது என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
பெண்கள் உயிர் மற்றும் தன்மானத்தை துச்சமாக கருதி அவமதிக்கும் இது போன்ற இழிநிலை சம்பவங்களை இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. உலக அமைதியை வலியுறுத்தி பேசும் இந்தியா, தனக்குள் அடங்கிய மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக கலவரம் நடந்த போது, அமைதியான சூழல் உருவாக தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசமெங்கும் அமைதியற்ற நிலை உருவாகும். ஜனநாயக நாடு என்பதற்காக சுதந்திரத்தை தன் கையிலேந்தி, குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பது யார்? மதித்து போற்ற வேண்டிய பெண்களை கூட்டு பாலியல் செய்த சம்பவ இடத்தில் கூடி இருந்த அனைவரும் பாரபட்சமின்றி குற்றவாளியாக கருதப்பட்டு, இனி இது போன்ற சம்பவத்தில் ஈடுபடாத வகையில் உச்சபட்ச தண்டனை விதித்திட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர் போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். உச்சநீதிமன்றமும், பிரதமர் மோடி அவர்களும் அளித்த உறுதியின்படி பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உரிய நீதியை பெற்றுத்தந்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
The post பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் அச்சம் வரவேண்டும்: சரத்குமார் வேதனை appeared first on Dinakaran.