×
Saravana Stores

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போடி : போடி நகர்ப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் மெயின் ரோட்டில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கழிவு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர்கள் வசித்து வரு கின்றனர். திறந்தவெளி கழிப்பிடங்களை முற்றிலும் அகற்றும் வகையில் போடி நகராட்சி 33 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி போடி நகர் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை சந்திப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஏற்படும் அடைப்புகளையும், குழாய்களில் இருக்கும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளையும் சரி செய்வதற்கு இந்த சந்திப்பிடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது லாரியுடன் கூடிய அடைப்பு நீக்கும் சாதனத்தை பாதாள சாக்கடை இணைப்புக் குழியில் பொருத்தி அடைப்பை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் போடி தேவாரம் சாலை மெயின் ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை எதிர்புறம் பாதாள சாக்கடை இணைப்பு தொட்டி உள்ளது.இங்கு அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுவது வழக்கமாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் இது போன்று கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி பொதுமக்கள் சிரமமடைந்தனர். அதுகுறித்து அப்போது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அடைப்பு நீக்கப்பட்டு கழிவு நீர் வெளியேறாமல் குழாயில் சீராக செல்லும்படி செய்யப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் அதே பாதாள சாக்கடை தொட்டியில் கழிவுநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.மேலும் மாநில நெடுஞ்சாலையில் கழிவு நீர் செல்கிறது.

ஹோட்டல்கள், மருந்து கடைகள்,வட்டாட்சியர் அலு வலகம், மரக்கடை, குடியிருப் புகள்,அரசு போக்குவரத்து பணி மனை, வங்கிகள், ஏடிஎம் மையங்கள், ஆட்டோ, டெப்போ ஸ்டாண்ட், இரு சக்கர வாகன ஷோரூம்கள் உள்ள முக்கிய வர்த்தக பகுதியாக உள்ளதால் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியில் சாலையில் கழிவு நீர் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அடைப்புகளை முழுமையாக நீக்கி, கழிவு நீர் வெளியே வராத வகையில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வெளியேறும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Bodi Nagar ,
× RELATED போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா மாநாடு