×

அடுத்த காற்றழுத்தம் 12ம் தேதி மிக்ஜாம் தீவிரப் புயல் ஆந்திராவின் பாபட்லா அருகே கரை கடந்தது


சென்னை : தீவிரப்புயலாகி சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல், நேற்று மதியம் 12.30 மணி முதல் 2.30 மணிக்கு இடையே ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே தீவிரப் புயலாகி கரையைக் கடந்தது. சென்னையைக் கடந்து புயல் சென்றபோது கொட்டித் தீர்த்த மழையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 340 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் 12ம் தேதி அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று நீண்ட கால வானிலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் கடந்தவாரம் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகி, காற்றழத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, பின்னர் மிக்ஜாம் புயலாக விஸ்வரூபம் எடுத்தது. மற்ற புயல்களைப் போல இந்த புயலும் படுவேகமாக சூறைக்காற்றுடன் கரையைக் கடந்து விடும் என்று நாம் எதிர்பார்த்த நிலையில், அதிதீவிர புயலாக மாறி, அதே நேரத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றதுடன், வரலாறு காணாத மழையை கொட்டித் தீர்த்துவிட்டு சென்றுள்ளது.

நேற்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதகளில் ஆந்திராவின் காவாலிக்கு வட கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், நெல்லூருக்கு வடக்கு- வடகிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும, பாபட்லாவுக்கு தெற்கு – தென்மேற்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு-தென் மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு இருந்தது.

பின்னர் அந்த புயல் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி பாபட்லா அருகே நகர்ந்து சென்று நேற்று மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி அளவில் தீவிரப் புயலாகவே கரையைக் கடந்து சென்றுள்ளது. அப்போது காற்றின் வேகம் 100கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் இருந்தது. இந்த தீவிரப் புயல் ஆந்திரப் பகுதிக்கு செல்வதற்கு முன்னதாக சென்னையை நெருங்கி தெற்கு ஆந்திரப் பகுதிக்கு பயணித்தது. அதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 340 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆவடி 280 மிமீ, காட்டுப்பாக்கம் 270மிமீ, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம் 240மிமீ, மாமல்லபுரம், சென்னை ஐஸ்அவுஸ் 220மிமீ, ராயபுரம், அடையாறு திருவிக நகர், கோடம்பாக்கம், செம்பரம்பாக்கம், சோழிங்கநல்லூர், தரமணி, மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், குன்றத்தூர், தாமரைப்பாக்கம், 190மிமீ, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், 180மிமீ, ஊத்துக்கோட்டை, பள்ளிக் கரணை, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், கொரட்டூர் 170மிமீ, கேளம்பாக்கம் 160 மிமீ, சோழவரம் 150மிமீ, ஆலந்தூர், திருப்போரூர் 140மிமீ, செங்குன்றம் 130மிமீ, கும்முடிப்பூண்டி 120மிமீ மழை பெய்துள்ளது.

குறிப்பாக இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் அதி கனமழையும், 29 இடங்களில் மிக அதி கனமழையும் பெய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்றுவரை தமிழ்நாட்டில் உள்ள காலகட்டத்தில் இயல்பாக 376.9 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 369.4 மிமீ தான் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 2% குறைவு.

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
இதற்கிடையே, 7ம் தேதி தெற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் காரணமாக 8ம் தேதி கேரளா அருகே ஒரு காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர அந்தமானுக்கு தெற்கு பகுதியில் புதியதாக ஒரு காற்றழுத்தம் 8ம் தேதி உருவாகி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி அது இலங்கைக்கு கிழக்கே நிலை கொள்ளும். அதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் 12ம் தேதி மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக நீண்ட கால வானிலை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

The post அடுத்த காற்றழுத்தம் 12ம் தேதி மிக்ஜாம் தீவிரப் புயல் ஆந்திராவின் பாபட்லா அருகே கரை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Migjam ,Babatla, Andhra Pradesh ,Chennai ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...