×

தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பாதுகாப்புக்கு 500 போலீசார் குவிப்பு

நாகப்பட்டினம் : தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர்.புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படுகிறது. வங்க கடலில் கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயம் பசலிக்காக அந்தஸ்தை பெற்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராயலத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்களும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். அதிலும் தொடர் விடுமுறை அல்லது விழாக்காலம் என்றால் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் கூட்டமும், சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அலைமோதும்.

இதன்படி கடந்த 7ம் தேதி முதல் தொடர் விடுமுறை மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கூட்டம் கலைகட்டியது. வேளாங்கண்ணி ஆர்ச் முதல் கடற்கரை வரை எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் குடும்பம், குடும்பமாக குவிந்து இருந்தனர். தங்களது குழந்தைகளுடன் பெற்றோர்கள் கடலில் இறங்கி விளையாடியதும். ஆரோக்கிய அன்னையை நோக்கி சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தியதும் கண்கொள்ளா காட்சியாகவே இருந்தது.

சிலுவைபாதை, பழையமாதா ஆலயம், பேராலயம் கீழ்கோவில், பேராலயம் மேல்கோவில், மாதாகுளம் என்று எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் குவிந்து நின்றனர். கடற்கரை சாலையில் எறும்பு கூட்டம் கூட்டமாக நகர்ந்து செல்வது போல் கட்டுக்கடங்காத கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் பேராலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து வந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு, பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க எஸ்பி ஜவஹர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் ஈடுபட்டனர்.

The post தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பாதுகாப்புக்கு 500 போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Velankanni temple ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...