×

செப். 30 முதல் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் நிறுத்தம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

டெல்லி: நாட்டில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். ரூ.1,000,ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணம் அதிகரிக்க வழிவகுக்கும் என அப்போதே விமர்சனம் எழுந்தது. 2017 மார்ச் மாதத்துக்கு முன்பே 2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் அச்சிடப்பட்டிருந்தன.

2018 மார்ச் நிலவரப்படி 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. படிப்படியாக குறைக்கப்பட்டு 2023 மார்ச் 31 நிலவரப்படி 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2018-19-ல் 2,000 நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது. இந்நிலையில் நாட்டில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

டெபாசிட், மற்றம் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.30-ம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை செப்.30-க்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ரூ.20ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி; வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவர் ரூ.2,000 மதிப்பிலான 10 தாள்களை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2013-14 காலகட்டத்திலும் இதேபோல ரூபாய்த் தாள்கள் திரும்பப் பெறப்பட்டன என கூறியுள்ளது.

 

The post செப். 30 முதல் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் நிறுத்தம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi ,Reserve Bank of India ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய செயல்...