×

சப்போட்டா விதை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சீலியம்பட்டி கிழக்குகாடு பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (31). திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, கடந்த 3 மாதத்திற்கு முன் இரண்டாவது பிரசவத்திற்காக சீலியம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது தனது முதல் குழந்தையான ஒன்றரை வயது செங்கனியை உடன் அழைத்துச் சென்றிருந்தார். 2வது குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டில் இருந்தபடியே தனது குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒன்றரை வயது பெண் குழந்தை செங்கனி, சப்போட்டா பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது சப்போட்டா பழ விதையை விழுங்கிவிட்டார். அது குழந்தையின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. இதனால், மூச்சு விட முடியாமல் குழந்தை செங்கனி மயக்கமடைந்தது. உடனே மல்லியகரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மல்லியகரை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சப்போட்டா விதை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Ezhilarasan ,Seeliyambatti ,Athur ,Salem district ,Trichy District Shariyur Police ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு