×

மணல் குவாரி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: தமிழ்நாடு மணல் குவாரி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அமலாக்கத்துறையால் வழங்கப்பட்ட சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ராஜூ,‘‘மணல் விற்பனை தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர்களை மாநில அரசு தாக்கல் செய்யவில்லை. குறிப்பாக எப்.ஐ.ஆர் எண்கள் இருந்தும் அதை ஆன்-லைன் மூலமாக பார்க்க முடியவில்லை. அது பிளாக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 7000 எப்.ஐ.ஆர்கள் உள்ளன. அனைத்து பதிவிறக்கம் செய்ய முடிகிறதா என்பது பொறுமையாக பார்த்தால் தான் தெரியும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘மாநில அரசு சார்பில் அனைத்து தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கூறுவது நிபுணர்கள் அறிக்கை மீது மாவட்ட ஆட்சியர்களின் கருத்தை கேட்கிறார்கள். நிபுணர்கள் அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு அனுப்பியுள்ளனர். அப்படி இருக்கும்போது மாவட்ட ஆட்சியர்களால் எவ்வாறு கருத்து கூற முடியும். எப்.ஐ.ஆர் நகல்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள். நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி இந்த தகவல்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதைத்தர நடவடிக்கை எடுக்கப்படும் ’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளனர். இருப்பினும் தற்போது வரையில் வழக்கில் இந்த ஆவணம் இல்லை,

அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக அமலாக்கத்துறை தரப்பில் கூறுவது கண்டனத்திற்கு உரியதாகும். குறிப்பாக நிபுணர்கள் அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு அனுப்பியுள்ளனர். அதுகுறித்த தகவல்களை கேட்டால் எப்படி அவர்களால் கருத்து கூற முடியும். அவ்வாறு செய்தால் அது சட்டவிதிகளுக்கு எதிரானதாகும் என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் எந்தெந்த எப்.ஐ.ஆர்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையோ அதன் விவரங்களை அமலாக்கத்துறைக்கு மாநில அரசு வழங்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தனர்.

The post மணல் குவாரி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,High Court ,Tamil Nadu ,Enforcement Department ,PM ,Trivedi ,Satish ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...