×

சேலம் புது பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் : பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகிறது

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மாநகராட்சி திடலில், நடப்பாண்டு அரசு பொருட்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், பல்வேறு துறைகளின் கீழ் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், ஆண்டுதோறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்பொருட்காட்சி அனைத்து மாவட்டங்களிலும், நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலுக்கு பொருட்காட்சி மாற்றப்பட்டு, நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான அரசு பொருட்காட்சிகள் நடத்த செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வரால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை கடைக்கோடிப் பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை, செய்தி மக்கள் தொடர்புத் துறை செய்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக அரசு பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று அரசு பொருட்காட்சிகளை நடத்தும்போது, நகரத்தில் உள்ளவர்கள் பொழுதுபோக்கிற்காக வருகை தந்தாலும், அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் எப்படி வழங்குகிறார்கள், அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து தெரிந்து கொள்கின்றனர்.

அத்துடன், பாரம்பரியம் மிக்க நமது பண்பாட்டைப் பறைசாற்றும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான அரசு பொருட்காட்சி விரைவில் ெதாடங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மாநகராட்சி திடலில், 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

குறிப்பாக, முதல்வரின் முகவரித் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு, பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சேலம் புது பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் : பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Salem ,New Bus Stand Corporation Solidad ,Salem New Bus Stand ,Salem New Bus ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்