×

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பெண்கள் உள்பட 260 பேர் கைது

 

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. இதுதொடர்பாக பெண்கள் உட்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். அதேபோல், சனாதனத்திற்கு ஆதரவாக பேசி வருவதுடன் பாஜ நிர்வாகி போல பேசி வருவதாகக்கூறி அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சேலம் வந்தார். அவருக்கு எதிராக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் பிரவீன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் பொருளாளர் காஜாமொய்தீன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே இன்ஜினியரிங் கல்லூரி முன்பு கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ‘ஆளுநரே திரும்பி போ’ என்று கோஷம் போட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 260 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டியைச் சேர்ந்த 82 வயதான ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வரதராசுலு உட்பட முதுமுனைவர் பட்டம் பெற்ற 4 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 502 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் முதலிடம் பிடித்த 99 பேருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பங்கேற்று பேசினார். விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

* கருப்பு உடைக்கு தடை ஏன்? போலீஸ் மீது பழிபோடும் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வருபவர்கள் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும். செல்போன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்திருந்தார். சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், ‘பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாவட்ட போலீஸ் எல்லைக்குள் வரவில்லை. நாங்கள் அதுபோன்று எதுவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கவில்லை’ என்றார். அதேபோன்று மாநகர கமிஷனர் விஜயகுமாரியும், ‘தாங்களும் இதுபோன்ற அறிவிப்பு வழங்கவில்லை’ என மறுப்பு தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பல்லைக்கழகம் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என்ற சுற்றறிக்கையை ரத்து செய்தது. பெரியார் பல்கலைக்கழகம் காவல்துறை மீது பழிபோடுவதற்கான காரணம் என்னவென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு ஒரு பொய்யான அறிவிப்பை வெளியிட்டு போலீஸ் மீது பழியை போட முயன்றனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

* பாமக எம்எல்ஏக்கள் திடீர் வெளிநடப்பு

பட்டமளிப்பு விழா நடந்தபோது பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் விழா அரங்கில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து, எம்எல்ஏ சதாசிவம் கூறும்போது, ‘‘பெரியார் பல்கலைக்கழகம் தனி நாடு போல செயல்பட்டு வருகிறது. பட்டமளிப்பு விழாவிற்கு, பல்கலைக்கழகம் அமைந்துள்ள சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ மற்றும் செனட் உறுப்பினரான அருளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் விழாவிற்கு வந்தபோது, உரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை. மனு அளிக்க ஆளுநரை சந்திக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் விழா முடியும் வரை காத்திருக்குமாறு கூறி அனுமதிக்க மறுத்தனர். பட்டமளிப்பு விழாவில் யாரும் தமிழை உச்சரிக்காதது வேதனை அளிக்கிறது. இதனை கண்டித்து விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தோம்,’’ என்றார்.

 

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பெண்கள் உள்பட 260 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,convocation ,graduation ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி...