×

குடும்பத்தை கவனிக்காவிட்டால் சம்பளம் ‘கட்’: வாரிசு அடிப்படையில் அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு கேரள அரசு ‘செக்’

திருவனந்தபுரம்: அரசுப்பணியில் இருக்கும்போது ஒருவர் மரணமடைந்தால் அவர்களது ரத்த உறவில் உள்ள வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். இவ்வாறு வேலையில் சேருபவர்கள், தாங்கள் சார்ந்த குடும்பத்தினர் அனைவரையும் பராமரிக்க வேண்டும். வேலையில் சேருவதற்கு முன் இது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். ஆனால் கேரளாவில் இவ்வாறு வாரிசு நியமன அடிப்படையில் வேலையில் சேரும் பலர் அதன் பின்னர் தங்களது குடும்பத்தினரை கவனிப்பதில்லை என்று அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. கணவன் இறந்த பின்னர் அரசு வேலையில் சேரும் மனைவி, கணவனின் பெற்றோரை கவனிப்பதில்லை என்றும், தாய் அல்லது தந்தை இறந்த பின்னர் வேலை கிடைக்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரை கவனிப்பதில்லை என்பன உள்பட ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்தன.

இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி வாரிசு நியமன அடிப்படையில் அரசு வேலையில் சேருபவர்கள் தாங்கள் சார்ந்த குடும்பத்தினரை கவனிக்காவிட்டால் அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 25 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்படும். இந்தத் தொகை அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும். முதல் கட்டமாக இந்த உத்தரவு அரசுத் துறைகளில் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் படிப்படியாக கேரள மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், தேவசம்போர்டு உள்பட பொதுத்துறை நிறுவனங்களிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post குடும்பத்தை கவனிக்காவிட்டால் சம்பளம் ‘கட்’: வாரிசு அடிப்படையில் அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு கேரள அரசு ‘செக்’ appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala government ,
× RELATED டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம்...