மதுரை: என்கவுண்டருக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ள உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மதுரை நாரிமேடு பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமது முருகன் என்ற தள்ளு மண்டையனை 2010ம் ஆண்டு மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை, சார்பு ஆய்வாளர் தென்னவன், தலைமை காவலர் கணேசன் ஆகியோரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தாம் அளித்த புகாரின் பேரில் என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யவும், விசாரணையை சிபிசிஐடி-யில் இருந்து சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் ஓர் அமைப்பு என்று கூறினார். ஆனால் தற்போது கொடூரமான குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயல்வது குற்றவாளிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் போது கை, கால்களை உடைத்து கொள்வது வழக்கமாகி வருவதாக தெரிவித்தார். என்கவுண்டர் மரணங்கள் என்பது அடிப்படை தவறு மற்றும் பிற்போக்கு சிந்தனை என்று உணராமல் மக்கள் பாராட்ட தொடங்கி உள்ளதாக அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சி, அரசியல் அமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை குறையும் என்றும் நீதிபதி தெரிவித்தார். உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை ஒரு மாயை என்றும் சட்டப்படி வழக்குகள் நடைபெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை வகித்த பொறுப்பை விட கூடுதல் அந்தஸ்துள்ள சிபிஐடி அதிகாரியை டிஜிபி நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தி, 6 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
The post ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்க: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.