சென்னை: கடந்த நிதியாண்டில் ரூ.2.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்து விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.15 லட்சம் கோடி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் கடன்களை வசூலிக்க கெடுபிடி காட்டப்படும் நிலையில், பல லட்சம் கோடி வராக்கடன் தள்ளிவைக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் நிதிநிலையை வராக்கடன்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன. கிங் பிஷர்ஸ் விஜய் மல்லையா, கீதாஞ்சலி ஜெம்ஸ் மெகுல் சோக்ஷி, விஸ்டம் டயமண்ட்ஸ் ஜதின் மேத்தா, ஏபிஜி ஷிப்யார்ட் ரிஷி கமலேஷ் அகர்வால் உட்பட பெரிய முதலாளிகள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், திருப்பிச் செலுத்தும் வசதியிருந்தும் வேண்டுமென்றே ஏமாற்றி விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் வராக்கடன் ரூ.7,848 கோடியாக உள்ளது.
இந்த கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், இவை கடன் தள்ளுபடி அல்ல தள்ளி வைப்பு என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புது விளக்கம் அளித்தார். அதாவது, நிலுவை பட்டியலில் இருந்து இந்த கடன் நிலுவை தொகை எடுக்கப்பட்டிருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கைதான் எனவும், சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழிகளிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் ரூ.2.09 லட்சம் கோடி கடன் தொகை ‘தள்ளுபடி’ செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்து, ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் ரூ.2.09 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளி வைத்துள்ளன. இத்துடன் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.57 லட்சம் கோடி கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வராக்கடன்களை, அதாவது வசூலிக்க முடியாத கடன் தொகையைத் தள்ளி வைத்ததன் மூலம், வங்கிகளின் மொத்த வராக்கடன் விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, 2017-18 நிதியாண்டில் ரூ.10.21 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வராக்கடன், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2022-23 நிதியாண்டில் ரூ.5.55 லட்சம் கோடியாகக் குறைந்து விட்டது. இதுபோல், கடந்த நிதியாண்டுடன் முடிவடைந்த 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.15,31,453 கோடி கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட வராக்கடன் ரூ.2,09,144 கோடியாகும். இதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் தள்ளி வைக்கப்பட்ட கடன் தொகை ரூ.1,74,966 கோடியாகவும், 2020-21 நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும் இருந்தது. இவற்றில் நிதியாண்டு வாரியாக 2020-21ல் ரூ.30,104 கோடி, 2021-22ல் ரூ.33,534 கோடி, 2022-23ல் ரூ.45,548 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் பொதுத்துறை வங்கிகள் தள்ளிவைத்த கடன் தொகைதான் அதிகம். பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே, கடந்த நிதியாண்டில் ரூ.24,061 கோடியை தள்ளி வைத்துள்ளது. இதற்கு அடுத்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.16,578 கோடி, யூனியன் வங்கி ரூ.19,175 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.10,258 கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.17,998 கோடியை தள்ளி வைத்துள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய நிறுவனங்கள் வாங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையானது வராக்கடனாக மாறும்போது அவை தள்ளிவைப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால், சாமானிய மக்களிடம் இந்த தொகை கெடுபிடியுடன் வசூலிக்கப்படுவதாகவும், மோசடி செய்யும் பெரிய நிறுவன அதிபர்களுக்கு வங்கிகள் தாராளம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஒன்றிய பாஜ அரசு வந்ததில் இருந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் நிதி மோசடியில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. வராக்கடனாக மாறுவது எப்படி? வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், அதற்கான வட்டி மற்றும் அசல் தொகை சேர்த்து தவணை முறையில் செலுத்துகின்றனர். தொடர்ந்து 90 நாட்கள் அசல் அல்லது வட்டித்தொகை செலுத்தப்படாது இருந்தால் அவை வராக்கடன் என்று வரையறை செய்யப்படுகின்றன. வராக்கடன் சுமையை குறைக்க வங்கிகள் இத்தகைய முடிவுகளை எடுக்கும் அதேநேரத்தில், லாபத்தொகையில் இந்த வராக்கடன்கள் கழிக்கப்பட்டு விடுவதால், அதற்கான வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பும் குறைந்து விடுகிறது என வங்கியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
* பட்டுனு வந்துடாது பல ஆண்டுகள் ஆகும்
ரிசர்வ் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகள் தங்கள் வராக்கடன் சுமையை குறைக்க ‘தள்ளி வைப்பு’ செய்தாலும், அவற்றை அவ்வளவு எளிதில் வசூலித்து விட முடியாது. இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள பல ஆண்டுகள் ஆகிவிடும். வராக்கடன் வசூல் நடைமுறைகள் வெளிப்படையாக செயல்படுத்தப்படுவதும் அல்ல. இதற்கான தனி கொள்கைகளும் கிடையாது. எனவேதான், வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள், கடன் தள்ளிவைப்பு செய்த பிறகு பொதுவாக திரும்பிச் செலுத்துவது கிடையாது. இதனால் வங்கிகளின் நிதிநிலை மிக மோசமாகும். எனவே, எவ்வளவு தொகை தள்ளிவைக்கப்படுகிறது. யாருடைய வராக்கடன் தள்ளி வைக்கப்படுகிறது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏஜெனில் இது பொதுமக்களின் பணம். வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டது’’ என்றார்.
* தள்ளி வச்ச கடன் தொகையில் கால்வாசி கூட வசூலாகல…
வசூலிக்க முடியாத மேற்கண்ட வங்கிக் கடன்கள் ‘தள்ளி வைக்கப்’பட்டாலும், அவற்றை தொடர்ந்து வசூலிக்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபடும் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவுதான். எனவே, இவற்றை தள்ளிவைப்பு என்பதை விட தள்ளுபடி என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும். வங்கிகள் வராக்கடனை வசூலிக்க மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால், வட்டி கூட வசூலானதாக கூற முடியாது என, வங்கியாளர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கேற்ப ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த 3 ஆண்டுகளில் தள்ளி வைக்கப்பட்ட கடன்களில் கால்வாசி கூட வசூலாகவில்லை என தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தள்ளிவைக்கப்பட்ட ரூ.5,86,891 கோடியில் வெறும் ரூ.1,09,186 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த கடன் தொகையில் 18.6 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி: 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி அவுட்: ரிசர்வ் வங்கி அறிக்கையில் பகீர் தகவல் appeared first on Dinakaran.