×

தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மிக்ஜாம் புயல் சென்னை மக்களை புரட்டி போட்ட நிலையில், தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மனகாவலம்பிள்ளை நகர், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி அங்குள்ள திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர்.

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மழையால் முடங்கின. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில், தேங்காய் வெட்டும் தொழில், கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் வெள்ளத்தில் மக்கள் சிக்கினர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதியில் மழையால் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. நாகர்கோவில், சுசீந்திரம், மணக்குடியில் பழையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை காரணமாக இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாத்தான்குளம் அண்ணாநகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அந்த பகுதியில் வசித்த 20 பேர் வெளியேற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பேய்க்குளம், கருங்கடல், அரசூர், பழனியப்பபுரம், பண்ணம்பாறை, தட்டார்மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலும் தெருக்கள், சாலைகள் வெள்ளக்காடாயின. வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிசான சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர் மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூறாவளி காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதீத கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களித்த மக்களை காப்பாற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும்.

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பதவியில் உள்ள அனைவரும் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளை செய்ய வேண்டும். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட உள்ள மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். சென்னையைப் போன்று தென் தமிழகத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மீனவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளை மீட்டெடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது தலைவர் கேப்டனின் ஆணைக்கிணங்க, இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Premalatha Vijayakanth ,CHENNAI ,DMD General Secretary ,Premalatha ,Dinakaran ,
× RELATED அரசுக்கு பிரேமலதா கோரிக்கை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்