×

ரூ.3ஆயிரம் கோடி மெகா பட்ஜெட்டில் நடைபெறும் பொள்ளாச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலை பணி தீவிரம்

*பல இடங்களில் 6 வழிச்சாலையாகிறது

பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பொள்ளாச்சி வழியாக கேரள மாநில பகுதிக்கும் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால், நகர் பகுதி எப்போதும் பரபரப்புடன் இருக்கும். நகரின் மையப்பகுதியில் வர்த்தக, வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் என ஒருங்கே இருப்பதால் கிராமப்புறங்களிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முக்கிய ரோடு வழியாக நகரில் வந்து செல்லும் வாகனங்களால், வருங்காலங்களில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதுடன், சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. பொள்ளாச்சி நகரின் மையப்பகுதி மட்டுமின்றி, உடுமலை நகர் பகுதியிலும் வந்து செல்லாமல், புறவழியாக விரைந்து செல்வதற்கு வசதியாக, சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் வரையிலும், நான்கு மற்றும் ஆறு வழியில் புறவழிச்சாலையமைக்க ஆய்வு நடந்தது. இதைதொடர்ந்து, பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் வரையிலும் சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் ரூ.3650 கோடியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் பூமி பூஜையுடன் புறவழிச்சாலை பணி துவங்கப்பட்டது.

புறவழிச்சாலை பணியில் முதற்கட்டமாக, சிறு பாலங்கள் அகலப்படுத்தும் பணியும், மக்கள் தொகை அதிகமுள்ள கிராமப்புறங்களில் தேவையான அளவிற்கு மேம்பாலம் அமைக்க ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள் எழுப்பப்பட்டு, சமமாக்க ரோடு எழுப்பும் பணி நடக்கிறது. சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு, புறவழிச்சாலை பணி தொய்வுடன் இருந்தது. கடந்த சில மாதமாக இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, பல்வேறு இடங்களில் வாகனங்கள் மாற்றுப்பாதையாக செல்கிறது இந்த புறவழிச்சாலை பணி நிறைவடையும் போது, பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இடைப்பட்ட பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற நகரின் மையப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவது மிகவும் குறையும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்பது, நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி, இந்த சாலை பணிக்காக முன்னெடுக்கும் என அனைத்துதுறை அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது. தற்போது பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்கள் வழியாக புறவழிச்சாலை பணி நடப்பதால், அப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்பணியை விரைந்து நிறைவு செய்து, பல்வேறு வகையில் வாகன போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்துக்கு, வெவ்வேறு இடங்களில். இடத்திற்கு தகுந்தார்போல் நான்கு மற்றும் 6 வழியாக புறவழிச்சாலையாக அமைகிறது. இப்பணிக்காக, பொள்ளாச்சி அருக கிராமபகுதி, பழனி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது திண்டுக்கல்லிலிருந்து மடத்துக்குளம் அருகே வரையிலும் பெரும்பாலான பணி நிறைவடைந்துள்ளது. இதுவரை சுமார் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இந்த புறவழிச்சாலை பணி முழுமையாக நிறைவடையும்போது, பல்வேறு பணி நிமிர்த்தமாக வெளியூர்களுக்கு விரைந்து செல்வோர் மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரையை கடந்து தென்மாட்டங்களுக்கு இரவு நேரத்தில் பயணிப்போர், குறிப்பிட்ட மணிநேரத்தில் விரைந்து செல்ல மிகவும் வசதியாக இருக்கும்.

மக்கள் தொகை அதிகமுள்ள பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியினுள் கனரக வாகனங்கள் வந்து செல்வது குறைவாகவே இருக்கும். இன்னும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அந்த இடத்திலும் நிலம் கையகப்படுத்தியபின், பணியை மேலும் விரைவுபடுத்தி, புறவழிச்சாலை பணியை விரைந்து நிறைவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரூ.3ஆயிரம் கோடி மெகா பட்ஜெட்டில் நடைபெறும் பொள்ளாச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi-Dindigul bypass ,Pollachi ,Coimbatore ,Dindigul Bypass ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதம்