×

ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூத்துள்ள நிலையில், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். சர்வதேச சுற்றுலா நகரான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா காட்சிமுனை போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவிற்கே அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். தெற்காசியாவின் மிகப்பெரிய ரோஜா பூங்கா என்ற பெயர் கொண்ட ஊட்டி அரசு ரோஜா பூங்கா விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ளது.

இப்பூங்காவில் ஹைபிரீட் டீ, புளோரிபண்டா, மினியேச்சர், பாலியந்தா, கிரீப்பர்ஸ் என ஐந்து வகையிலான ரோஜா இனங்களிலிருந்து, 4000 ரகங்களை கொண்ட, 30 ஆயிரம் ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மலர்கள் இல்லாத நிலையில், இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார்படுத்தும் பணியில் கடந்த இரு மாதங்களாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துள்ளன.

சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு என பல வண்ணங்களில் பூத்துள்ள இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இரண்டாம் சீசனை அனுபவிக்க வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன். இதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Rose Park ,Rose ,
× RELATED பூங்காவில் பச்சை நிற ரோஜா