×

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு


காஞ்சிபுரம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அரவை முகவர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், தலைவர் டி.பாபு, செயலாளர் பி.சுந்தரவரதன் மற்றும் நிர்வாகிகள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக அரவை முகவர்களாக உள்ள எங்களுடைய ரைஸ் மில்களின் மாதாந்திர அரவை திறன் 23,500 மெட்ரிக் டன். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவைத்திறனுக்கு ஏற்ப வழங்காமல் 40 சதவீத நெல் மட்டுமே அதிகாரிகள் வழங்குகின்றனர். மீதமுள்ள நெல்லை மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு மட்டுமே அரிசி ஆலையை இயக்க முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது.

மாதத்தில் 15 நாள் மட்டுமே அரிசி ஆலைகள் இயங்குவதால் கூலியாட்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். ஒவ்வொரு அரிசி ஆலையிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கூடுதலாக 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். இதை நம்பிதான் ஒவ்வொரு அரிசி ஆலைகளும் ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரை வங்கிகளில் கடன் பெற்று செறிவூட்டப்பட்ட இயந்திரம், கருப்பு நீக்க இயந்திரங்களை அமைத்துள்ளோம். எனவே, நாங்கள் தொடர்ந்து தொழில் செய்யும் வகையில் ரைஸ் மில்களின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

 

The post அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Collector ,Kanchipuram ,Tamil Nadu Consumer Goods Vanipakzaga Grinding Agents Association ,Chengalpattu ,District ,T. Babu ,Sekretär B. Sundarawaratan ,Kalichelvi Mohan ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...