×
Saravana Stores

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: நிலக்கரி லாரி எரிந்து நாசம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை நிலக்கரி ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து நடுரோட்டில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சிவகாசியில் உள்ள தனியார் பேப்பர் அட்டை கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக ஆழ்வார்திருநகரியை சேர்ந்த முருகேசன் என்பவர் இருந்தார்.

இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் லாரி வந்த போது திடீரென்று நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் பக்க டயர் ஸ்டிரிங்குடன் துண்டாகி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. மேலும் மோதிய வேகத்தில் டீசல் டேங்க் வெடித்து லாரியில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் கற்பகராஜா, கிளீனர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் தீ லாரி முழுவதும் மளமளவென பரவி பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது. அதிலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: நிலக்கரி லாரி எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : KOVILPATI ,NADUROT ,Balamurugan ,Tuticorin ,Taurus ,Dinakaran ,
× RELATED மணல் முறைகேடு குறித்து புகார்...