×

உயிர்த்தெழுதல் திமிறி எழுவதற்கான ஊக்கம்

கிறிஸ்தவம் காட்டும் பாதை

(மத்தேயு 28:1-10)

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது கடவுள் இருக்கிறார் அவர் உலகையும் அதிலுள்ள உயிர்களையும் படைத்தவர். இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தர் என்பதற்கு இணையான நம்பிக்கைதான் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு கிறிஸ்தவர்களுக்குள்ள சான்றுகள் யாவை.

1) இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் தாம் பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதை தமது சீடர்களுக்கு மூன்று முறை கூறியுள்ளார். (மாற்கு 8:31; 9:31; 10:34)

2) சிலுவை மரணத்திற்குப் பின் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். கல்லறை வாயிலில் ஒரு கல்லையும் உருட்டி வைத்தனர். (மாற்கு 15: 46)

3) கல்லறையைப் பாதுகாக்க காவல் வீரர்கள் நியமிக்கப்பட்டனர். (மத்தேயு 27:66)

4) வானதூதர் கல்லைப் புரட்டி இயேசு இங்கு இல்லை என மகதலா மரியாவுக்கும் மற்றொரு மரியாவுக்கும் அறிவித்தார். (மத்தேயு 28:2-6)

5) உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து இவ்விருவரையும் எதிர்கொண்டு சந்தித்து துணிவூட்டினார். மேலும், தமது சீடர்களைக் கலிலேயாவுக்கு போகச் சொல்லுமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். (மத்தேயு 28: 9-10)

6) இயேசு தாம் கூறியவாறே உயிர்த்தெழுந்து விட்டார் அவரது உடல் கல்லறையில் இல்லை என்பதற்குக் கல்லறையைக் காவல் காத்தவர்களே சாட்சியாயினர். (மத்தேயு 28: 11)

7) உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தாம் கூறியபடியே தமது சீடர்களைக் கலிலேயாவில் சந்தித்தார் (மத்தேயு 28: 16-18).

8) உயிர்த்தெழுந்த இயேசு எம்மாவு எனும் ஊருக்குச் சென்று கொண்டிருந்த சீடர்களையும் சந்தித்து உரையாடினார் அவர்கள் இல்லத்திற்கும் சென்றார் (லூக்கா 24: 13-35)

9) உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் அளித்த உணவை உட்கொண்டார் (லூக்கா 24:42)

10) மீண்டும் அவர் தமது சீடர்களை சந்தித்து அவர்களுக்கு உணவளித்து ஆச்சரியப்படுத்தினார். (யோவான் 21: 9-10)

11) இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் அதற்கு நாங்களே சாட்சிகள் என்று சீடர்கள் எருசலேமில் முழக்கமிட்டு யூத சமயத் தலைவர்களைத் திணறடித்தனர். (திருத்தூதுவர் பணிகள் 4:10-20)

12) கல்வியாளரும், சட்ட வல்லுனரும் அறிவாற்றலுமுடைய தூய பவுல் அடிகள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்காக சான்று பகர்ந்தார் வாதிட்டார் (1 கொரிந்தியர் 15: 12-26)

இவ்வாறு திருமறையிலும் ஆதித் திருச்சபை மக்களிடையேயும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் அவரது உடலை அன்றைய அதிகார வர்க்கம் கைப்பற்றியிருக்க வேண்டும் அல்லவா? இறந்த ஒருவரின் உடலை எத்தனை நாளுக்கு மறைத்து வைக்க முடியும்.? யார் கண்ணிலும் படாமல் எப்படிப் பாதுகாக்க முடியும்? அல்லது வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடியும்? இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்கிற நம்பிக்கையும், இயேசு கிறிஸ்துவின் இறையரசு பற்றிய நற்செய்தியும், மானுட மீட்புக்கும் நல்வாழ்விற்கும் சமுக நல்லிணக்கத்திற்கு அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் இன்று அவரை உலகின் பல பகுதி மக்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனும் செய்தி யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு செய்தியாகும். அது மட்டுமல்ல பல்வேறு அதிகாரங்கள், அமைப்புகள், மற்றும் நம்பிக்கைகளால் அடிமைப்பட்டு, துவண்டு கிடந்த மக்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் தந்த ஒரு செய்தியாகும். மேலும், உலக அதிகாரங்கள் எல்லைகளுக்குட்பட்டவை என்பதையும், மக்களின் நம்பிக்கையும், துணிவும், உள உறுதியும், கூட்டுச் செயல்பாடும் அதிகாரங்களை நிலைகுலையச் செய்யும் என்பதையும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நிரூபித்துள்ளது.

இயேசுவுக்கு மரண தண்டனை விதித்த பிலாத்து பின்னர் ரோம ஆட்சியாளர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டான். இயேசுவுக்கு எதிராக இயங்கிய யூத சமயத் தலைவர்கள் செத்து மடிந்து போயினர். எருசலேம் தேவாலயம் கூட தரைமட்டமாகியது. ஏன் ஒரு கட்டத்தில் இஸ்ரவேல் நாடுகூட இல்லாமல் போனது. அது மீண்டும் 1948-ஆம் ஆண்டுதான் தனி நாடாக உருவானது. ஆனால், இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.

அவர் நம்பிக்கையிழந்தவர்களின் அருகிலிருந்து துணிவூட்டு கிறார் எனும் நம்பிக்கை உலகெங்கும் நம்பப்படுகிறது. உயிர்த்தெழுந்த ஆண்டவரை கிறிஸ்தவ சமயத்திற்குள் சிறைவைக்க முடியாது. அவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியவரல்ல. அவர் உலகில் நம்பிக்கை இழந்து நிற்கும் ஒவ்வொரு வருக்கும் நம்பிக்கை அளிக்கிறார். திமிறி எழ ஆற்றலளிக்கிறார். ஆம் அவர் ‘‘நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும் வரை அவர் சோர்வடையார்; மனம் தளர மாட்டார்’’ (எசாயா 42:3-4)

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post உயிர்த்தெழுதல் திமிறி எழுவதற்கான ஊக்கம் appeared first on Dinakaran.

Tags : Christianity ,Jesus Christ ,
× RELATED தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்...