×

மதுரை ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.347.47 கோடியில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகள்

*விரைந்து முடிக்க பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், ரூ.347.47 கோடி செலவில் மறு சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.மதுரை ரயில் நிலையத்தில் நாள்தோறும் 97 ரயில்கள் வந்து செல்கின்றன. அதிகபட்சமாக தினந்தோறும் சுமார் 55 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347.47 கோடி மதிப்பிலான மறு சீரமைப்பு பணிகளுக்கு சென்னை தனியார் நிறுவனத்திற்கு கடந்த வருடம் செப். 22ல் ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்பது விதியாகும். மும்பை தனியார் திட்ட மேலாண்மை சேவை நிறுவனம் இப்பணிகளை கண்காணிக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் நவீன வசதிகளுடன் இரு முனையங்கள் அமைகின்றன. கிழக்கு நுழைவாயிலில் இரு அடுக்குகள், மேற்கு நுழைவாயிலில் ஒரு அடுக்கு என புதிதாக 3 வாகன காப்பகங்கள் அமைகின்றன. ரயில் நிலையத்தையும், பெரியார் பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை, பார்சல்களை கையாள தனி மேம்பாலம், கிழக்குப் பகுதியில் உள்ள வாகன காப்பகங்களுக்கு செல்ல இரு நடை மேம்பாலங்கள் அமைகின்றன.

கிழக்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் 2 மாடி கட்டிடமாக 22,576 சதுர மீட்டரில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் தரைத்தளத்தில் வருகை, புறப்பாடு பயணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எளிதாக சென்று வரும்படி வசதிகள் செய்யப்பட உள்ளது. கழிப்பறைகள், பொருட்கள் வைப்பறைகள், குழந்தைகளுக்கான வசதிகள், பாலூட்டும் அறைகள், உதவி மையங்கள், பயணிகள் பயன்பாட்டு வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைகின்றன. முதல் தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறைகள், உணவகங்கள், சிறு வணிகக் கடைகள், கழிப்பறைகள் அமைகிறது. 2வது தளம் வணிக வளாக பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.

மறு சீரமைப்பில் முக்கிய அம்சமாக கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடங்களை இணைத்து ரயில் பாதைகளுக்கு மேலாக பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைகிறது.
இந்த அரங்கில் இருந்து பயணிகள் எளிதாக தங்களது நடைமேடைகளுக்கு சென்றுவர இரு ஜோடி எஸ்கலேட்டர்கள், இரு லிப்ட்கள், 4 நடை மேம்பால படிக்கட்டுகளும் அமைகின்றன. இந்த அறையில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் நடைமேடைகளில் வரும் ரயில்களை காணும் வகையிலும் அமைகிறது. தற்போதைய மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் வசதிகளுடன் இரு மாடி கட்டிடமாக அமைகிறது.

இந்த கட்டிடத்தில் வருகை புறப்பாடு, பயணிகளுக்கு தனித்தனி பகுதிகள், பயண சீட்டு அலுவலகங்கள், ரயில்வே சேவை அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை உருவாகின்றன. கிழக்கு நுழைவாயில் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தரைத்தளத்திற்கு மேல் இரு தளங்கள் கொண்ட 9,430 சதுர மீட்டர் வாகன காப்பகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தரை தளத்திற்கு மேல் மூன்று தளங்கள் கொண்ட 2,822 சதுர மீட்டர் வாகன காப்பகம் அமைகிறது. மேற்கு நுழைவாயிலில் தரைத்தளத்திற்கு மேல் ஒரு தளத்துடன் 2,580 சதுர மீட்டரில் வாகன காப்பகம் அமைகிறது. அனைத்து வாகனங்களும் ரயில் நிலையப் பகுதியில் சிக்கல் இல்லாமல் சென்று வரும் வகையில் முகப்பு சாலைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

* இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையில் மீனாட்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் தூங்கா நகர் என்ற பெருமைக்குரிய மதுரை நகரத்து ரயில் நிலையம், பழமையுடன், நவீனமும் கலந்ததாக புதுப்பிக்கப்படுகிறது. அழகுடன், கூடுதல் வசதிகளும் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், பயணிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

* ரயில் பயணியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை ரயில் நிலையம் முக்கியமானது. இங்கு பயணிகள் வந்து செல்வதில் தற்போது பல்வேறு இடையூறுகள் உள்ளன. எனவே, ரயில்வேயில் நடக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். மேலும் பயணிகளுக்கு இடையூராக கிழக்கு வாசல் பகுதிகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியவில்லை.

மேலும் டூவீலர் காப்பகங்களை முறைப்படுத்த வேண்டும். டூவீலர் பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.
ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளையும் பலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

The post மதுரை ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.347.47 கோடியில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Station ,Madurai ,
× RELATED ஓய்வு பெறும் நாளில் மதுரை...