மதுரை: முன்கூட்டி விடுதலை செய்ய அனுமதி வழங்குவதில் ஆளுநர் தாமதிக்கும் நிலையில், திருச்சி டாக்டர் ஸ்ரீதர் கொலையில் 23 ஆண்டாக சிறையில் இருக்கும் இருவருக்கு ஐகோர்ட் கிளை 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருச்சி பீமா நகரில் கிளினிக் வைத்திருந்தவர் டாக்டர் ஸ்ரீதர். திருச்சி நகர பாஜ தலைவராக இருந்தார். கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ஏராளமான கரசேவகர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தார். இதனால், விரோதம் ஏற்பட்ட நிலையில் 1999ல் கிளினிக்கில் இருந்து வீட்டுக்கு டூவீலரில் சென்ற போது உறையூர் பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட 2வது விரைவு நீதிமன்றம், ஜாகீர் உசேன், தடா மூசா, சித்திக் அலி, ரஹ்மத்துல்லா கான், ஷேக் ஜிந்தா மதார், உமர் பாரூக் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஷாஜகானுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்த வழக்கில் ரஹ்மத்துல்லா கானை விடுவிக்கக் கோரி, நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த அவரது தாய் சீனத், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், ‘‘எனது மகன் 23 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ளான். 15.9.2008ல் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு 7 ஆண்டு நிறைவு செய்த 1,406 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் 1.2.2018ல் 20 ஆண்டுகளை கடந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், எனது மகன் விடுதலை செய்யப்படவில்லை. எங்களது கோரிக்கையை நிராகரித்த சிறைத்துறை கூடுதல் டிஜிபியின் உத்தரவை ரத்து செய்து, எனது மகனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இதேபோல் நெல்லை பத்தமடையை சேர்ந்த மைதீன்பீவி, தனது மகன் ஷேக் ஜிந்தா மதாரை விடுதலை செய்யக் கோரி மனு செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் வக்கீல் ஜின்னா ஆஜராகி, ‘‘சிறையில் 23 ஆண்டுக்கும் மேலாக உள்ளனர். பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்’’ என்றார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர்களின் மகன்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசு முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதேபோல் சிலருக்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளது. இருவருக்கும் ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை’’ என்றார். இதையடுத்து இருவருக்கும் 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், ரஹ்மத்துல்லா கான் மேலப்பாளையம் காவல் நிலையத்திலும், ஷேக்ஜிந்தா மதார் பத்தமடை காவல் நிலையத்திலும் மாதம் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர்.
The post விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் 23 ஆண்டாக சிறையில் இருக்கும் இருவருக்கு இடைக்கால ஜாமீன்: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.