முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த தெற்கு பைபாஸ் சாலை பஸ்நிறுத்தம்

*பயணிகள், வாகனஓட்டிகள் கடும் அவதி

நெல்லை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள் நடந்து வருகின்றனர். இருப்பினும், முறையான பராமரிப்பின்றி பல முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிறுத்தங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் துவங்கும் இடம் அருகே உள்ள தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் முக்கிய பகுதியாக உள்ளது.

இந்த பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ்நிலையம் பகுதியில் இருந்து வரும் நகர பஸ்கள் மட்டுமின்றி மதுரை, ெசன்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும், தென்காசி, சங்கரன்கோவில், தேனி, ராஜபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.

இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த பஸ் நிறுத்தம் ஒட்டி அண்ணா சாலை செல்லும் வாகனங்களும், சர்வீஸ் சாலை வழியாக வண்ணார்பேட்டை சந்திப்பு பகுதிக்கு செல்லும் வாகனங்களும் கடந்து செல்கின்றன. இதனால் இந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பஸ் நிறுத்தம் மற்றும் அதை தொடர்ந்து உள்ள சர்வீஸ் சாலை மேடு பள்ளமாக உள்ளது. அதிக குண்டு குழிகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பஸ்நிறுத்தம் பலஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் மெகா குடிநீர் குழாய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தினகரனில் இதுகுறித்த செய்தி வெளியான மறு தினம் அந்த குழாய்கள் சற்று ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டன. ஆனால் இப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் சாலையானது மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் பஸ்சிற்காக காத்துநிற்கும் பயணிகளும் மேடுபள்ளங்களுக்கு இடையே கடந்து வந்து பஸ்சில் ஏறவேண்டிய சூழல் உள்ளது. மழை பெய்துவிட்டால் இங்கு அதிகளவில் நீர் தேங்குகிறது. இதனால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.

மாநகரின் மிக முக்கிய இந்த பஸ் நிறுத்தப்பகுதி சாலை நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர். எனவே இந்த பஸ் நிறுத்தப்பகுதி மேடு பள்ளங்களை சரி செய்வதுடன் தற்போது குழாய்கள் ஒதுக்கப்பட்ட இடம் அருகே இருந்து பஸ்நிறுத்தம் தாண்டி அண்ணா சாலை தொடங்கும் பகுதிவரை சாலையை சீராக அமைத்து மேம்படுத்தவேண்டும்.

இதனால் இடதுபுறம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி கடந்து செல்லும். பஸ் நிறுத்த பயணிகளும் பயன் அடைவார்கள். இந்த பஸ் நிறுத்தம் அருகே அண்ணாசாலை மற்றும் சர்வீஸ் சாலையில் இருந்து எதிர்புறமாக வாகனங்கள் வருகின்றன. செல்லப்பாண்டியன் பாலம் துவங்கி தொடர்ச்சியாக சாலையின் மையப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அண்ணா சாலையில் இருந்து எதிர் திசையில் ஒருவழிப்பாதையில் அதிவேகமாக வரும் வாகனங்களாலும் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த தெற்கு பைபாஸ் சாலை பஸ்நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: