×

பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை தொடக்கம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மொத்தமுள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதேபோல், 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, கல்வி உரிமைச் சட்டப்படி இந்த பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு விட்டது. தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சில விவரங்களை கோரி உள்ளது. அவை விரைவில் வழங்கப்பட்டு தேர்வு நடவடிக்கைகள் தொடங்கப்படும். இடைப்பட்ட காலத்தில் தற்காலிகமாக 36 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார். இதையடுத்து, இது போன்ற விஷயங்களில் அரசு அவசரக்கதியில் செயல்பட வேண்டும். ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிய விவரங்களை வழங்க வேண்டும். தேர்வு நடைபெற நடவடிக்கைகளை தேர்வு வாரியம் விரைந்து முடிக்க வேண்டும். ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. இடைப்பட்ட காலத்தில் 36 ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று அனுமதித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை தொடக்கம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,ICourt ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பொது வினியோக திட்ட கொள்முதலில் மசூர்...