- ராம் கோயில் கும்பபிசேகம்
- ராகுல் காந்தி
- கோஹிமா
- முன்னாள்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- நரேந்திர மோடி
- ஆர்எஸ்எஸ்
- பாஜக
- அயோத்தியா, உத்தரப் பிரதேசம்
கோஹிமா: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நரேந்திரமோடி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜ நிகழ்ச்சியாக மாற்றியதால் விழாவில் பங்கேற்பது கடினம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை நாகலாந்து சென்றடைந்தது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறுகையில்,‘‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவானது ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் விழாவை முற்றிலும் அரசியல், பிரதமர் நரேந்திரமோடியின் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது.
இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ விழாவாகிவிட்டது. அதனால் தான் அந்த விழாவிற்கு செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். நாங்கள் அனைத்து மதங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம். இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவர்கள் கூட கும்பாபிஷேக விழாவை பற்றிய தங்களது கருத்துக்களை பகிரங்கப்படுத்தி உள்ளனர். இது ஒரு அரசியல் செயல்பாடு. இது முற்றிலும் பிரதமரின் விழா மற்றும் ஆர்எஸ்எஸ் விழா. இதில் நாங்கள் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லை. இந்தியாவின் பிரதமர் மற்றும் நமது கொள்கைக்கு பிரதான எதிரியான ஆர்எஸ்எஸ்சும் ஒரு விழாவை கைப்பற்றி தேர்தல் விழாவாக மாற்றியுள்ளது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்றார்.
* தொகுதி பங்கீடு பிரச்னை தீர்க்கப்படும்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு பிரச்னை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து கூட்டணி கட்சிகளுடன் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அது மிக சிறப்பாக நடந்து வருகின்றது. எனவே பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்கும்” என்றார்.
The post அரசியல் நிகழ்வாக மாற்றியதால் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது கடினம்: ராகுல்காந்தி appeared first on Dinakaran.