×

ராயபுரம், தாம்பரம், வண்டலூர், மாதவரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: ராயபுரம், தாம்பரம், வண்டலூர், மாதவரம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வரும் 20ம் தேதிக்குள் முடித்திட அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டார். தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டார். மாதவரம் ரெட்டேரியில் ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணியை பார்வையிட்டார். பின்னர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருவொற்றியூர் துறைமுகத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடி விசைப்படகுகளுக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டார்.

ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட எஸ்பிளனேடு சாலையில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் 463 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும், பிரகாசம் சாலையில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 1.11 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பருமழைக்கு முன்னதாக வரும் 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ராயபுரம், தாம்பரம், வண்டலூர், மாதவரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Tambaram ,Vandalur ,Madhavaram ,Chennai ,North East… ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...