×

மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்: மேயர் பிரியா பேட்டி

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில், சாலைகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று மக்களை தேடி மேயர் திட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற சென்னை மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மேயர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, மேயர் பிரியா மண்டலம் 5, 6க்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வும் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், அடையாறு மண்டலம், தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா நேற்று மண்டலம் 13க்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்துறை போன்ற பிற துறைகளைச் சார்ந்த கோரிக்கைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளை சார்ந்த கோரிக்கைகள் மீது அந்த துறைகளுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டலம் 5ல் நடந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த 333 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இதில் 331 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மண்டலம் 6ல் நடந்த முகாமில் 241 புகார்கள் பெறப்பட்டு, இதில் 160 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களின் மீது மத்திய வட்டார துணை ஆணையர் மற்றும் மண்டல அலுவலர் வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, இன்று (நேற்று) நடந்த முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களைத்தேடி மேயர் திட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சென்னை குடிநீர் வாரியம் தொடர்பாகவும் பெரும்பாலான புகார்கள் பெறப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளனவோ அந்த இடங்களில் உடனடியாக சாலைப் பணிகளை மேற்கொள்ளும்படி அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மயிலை த.வேலு எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர்கள் ஷரண்யா அறி, எம்.பி.அமித், மண்டலக்குழு தலைவர் ஆர்.துரைராஜ், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் சரவண மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* 303 கோரிக்கை மனுக்கள்

மக்களைத் தேடி மேயர் திட்ட முகாமில், நேற்று பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளி கட்டிட வசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 303 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 11 மனுக்கள், சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பான 3 மனுக்கள் என 14 மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதர கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.

* நலத்திட்ட உதவித்தொகை

சிறப்பு முகாமில் முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.1,00,000 வீதம் 10 பயனாளிகளுக்கு காசோலைகளும், 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 5 மகளிருக்கு தலா ரூ.5479 மதிப்பிலான மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களும், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 சென்னை பள்ளியைச் சார்ந்த 21 மாணவர்களுக்கு தலா ரூ.2000 பரிசுத் தொகையும், 8 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை மாதாந்திர உதவித் தொகையும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் மேயர் பிரியா வழங்கினார்.

* சிறப்பு முகாமில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு: கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாமில், மேயர் பிரியா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், கோரிக்கை மனு வழங்க வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக மேயர் அறிவுரைப்படி முகாமில் இருந்த மாநகராட்சி மருத்துவர்கள் மூலம் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, உடல்நிலை சீரடையாததால் அந்த பெண்ணை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு அந்த பெண்ணை மாற்றினர். அங்கு சிகிச்சை அளித்த நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயக்கம் தெளிந்த நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவரின் உடல்நலம் சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் கோரிக்கை மனுவில் இந்திரா நகர், 6வது தெருவில் குப்பை அகற்றுவது தொடர்பாகவும், சாக்கடை கழிவுகளை அகற்றுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உடனடி நடவடிக்கையாக, குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

The post மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya Patti ,Chennai ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...