×

மழை பாதிப்பை சீர் செய்ய 44 மின்பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி நிதி வழங்க உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய 44 மின்பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி நிதியை உடனடியாக வழங்க அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலி வாயிலாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் விஷு மஹாஜன், இயக்குநர்கள், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும், பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டார்.

மேலும், கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாக சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்திற்கு ரூ.10 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்கிட அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர், அமைச்சர் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24×7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மின்தடை சம்பந்தமான புகார்களை 24×7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

The post மழை பாதிப்பை சீர் செய்ய 44 மின்பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி நிதி வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,North East Monsoon ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...