×

கொட்டித்தீர்த்த மழையில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்; ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் எங்கே போகும்?.. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம் என ஆய்வில் தகவல்

சென்னை: மிக்ஜாம் புயலானது வரலாறு காணாத மழையை சென்னைக்கு கொடுத்துள்ளது. இரண்டு நாட்களாக விடிய விடிய கொட்டி தீர்த்த மிக கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்தது. மழை நின்ற இரண்டே நாளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீர் வேகமாக வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வெள்ளம் வடியாத பகுதிகள் என்று பார்த்தால், அவை நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய குடியிருப்புகள்தான். அங்கிருப்பவர்கள்தான் தற்போது படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதை கேலி செய்து சமூக வலைதளங்கள், இணைய தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிண்டல்கள், கேலிப் படங்கள் வெளியாகின. அவை அனைத்தையுமே பார்த்தால், ‘‘வெள்ளம் தன் இடத்தை தேடி மிகச் சரியாக வந்திருக்கிறது, நாம் தான் அதன் இடத்தில் குடியிருக்கிறோம்’’ என்ற விமர்சனங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகள் எடுத்துக்காட்டாக உள்ளது.

சென்னை மாநகரம் மிகப்பெரிய ஏரிகளை அதிகம் கொண்ட நகரமாக இருந்தது. பழைய சென்னையில் இருந்த ஏரிகளில் 96 சதவீத நீர்நிலைகளை தற்போது காணவில்லை என்கிறது புள்ளி விபரங்கள். 1906ம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்நிலைகள் இருந்தன என்றும், 2013ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்நிலைகள் தான் உள்ளன என்றும் அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போல் தமிழ்நாட்டில் எந்த நகரமும் அசுரவளர்ச்சி அடையவில்லை. தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் சென்னையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு நகரம் வளர்ந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னை மாநகரத்தின் ஆரம்ப கால பகுதிகளில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. அது நகரமயமாகவே இருந்தது. மழை நீர் வடிகால் வசதிகள், சாலை வசதிகள், மின்சார வசதிகள், கழிவு நீர் வசதிகள் என எல்லாமே சிறப்பாக இருந்தது.

ஆனால் 2000ம் ஆண்டில் ஐடி நிறுவனங்கள் கிடுகிடுவென வரத்தொடங்கிய போது, சென்னை மாநகரம் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது. வேளச்சேரியை சுற்றி உள்ள ஏரிப்பகுதிகள், தரமணி, பெருங்குடி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலை, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்தன. வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளையும் அதன் அருகிலேயே அமைக்க ஆசைப்பட்டனர். அதனால் வந்த வினையாக, வளர்ச்சிக்கு ஏற்றமாதிரி அதனை சுற்றி இருந்த ஏரி பகுதிகளும் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின.

சென்னையில் 1975ல் எத்தனை இடங்கள் நத்தம் புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளாக இருந்தவை இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், காலி மனைகளாகவும், வீடுகளாகவும் மாறி உள்ளன என்பதை கணக்கிட்டால், உண்மையான நிலை அனைவருக்கும் தெரிய வரும். சென்னை வீட்டு மனைகளின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு சென்றதால் பல பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்தார்கள். சென்னையில் பல நீர்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறின. அதன் விளைவால் ஒழுங்கற்ற மழைநீர் இல்லாத நகர்பகுதிகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மாறின. இதனை சரி செய்ய கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் 2015ல் மோசமாக பாதித்த பிறகே நிலைமையை மக்கள் உணர்ந்தனர். அரசு கடிவாளத்தை இறுக்கியது.

இதன் விளைவாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இப்போது யாருமே ஒரு சென்ட் இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது. அப்படி ஆக்கிரமிக்க முயன்றால் சிறைக்கு தான் போக வேண்டியதிருக்கும். சென்னையில் நீர்நிலைகளில் வீடு கட்டுவதை தடுக்க அரசு தற்போது தடையில்லா சான்று வழங்குவதை நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை பல லட்சம் கொடுத்து வாங்கியவர்கள் நிலமை இந்த மிக்ஜாம் புயல் பாதிப்பில் பட்டவர்த்தனமாக எதிரொலித்துள்ளது. ஏனென்றால், மிக அதிகமான மழை கொட்டி தீர்த்த சூழ்நிலையிலும் சாதாரணமான இடங்களில் மழைநீர் வேகமாக வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால் வெள்ளம் வடியாமல் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்தால், பெரும்பாலான பகுதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் தான்.

இங்கு தான் வெள்ள நீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மக்கள் நீச்சல் அடித்து கூட வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பலர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அவர்களை தான் தற்போது படகு மூலம் மீட்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதலில் சொன்னவாறு, வெள்ளம் தனது இருப்பிடத்தை தான் தேடி வந்திருக்கிறது என்பது போல ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் தான் தற்போது வெள்ளம் சூழ்ந்து தனி தீவுகளாக காணப்படுகிறது.

இனியாவது மாயையான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல், ‘ரிவர் வியூ’ விளம்பரங்களை கண்டு மயங்கிவிடாமல், அது நீர்நிலை ஆக்கிரமிப்பா? என்பதை உணர்ந்து வீடு வாங்குங்குகள் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கை. இல்லாவிட்டால் மழை காலங்களில் இதே நிலமை தான் நீடிக்கும். தெருக்களில் உள்ள மழைநீரை வெளியேற்றிவிடலாம். ஆனால், ஏரிகளை சூழ்ந்த வெள்ள நீரை எப்படி வெளியேற்ற முடியும். அதனால் தான் தற்போது வெள்ளம் சூழ்ந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து அவர்களை மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து, நீர்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் ஏரியையும், ஏரியின் நீர்வழிப்பாதைகளையும் ஆக்கிரமித்து புதிய ஏரியாக்களை உருவாக்கியவர்களுக்கு அந்த ஏரியே, ஒவ்வொரு பெருமழை காலங்களிலும் தக்க பாடங்களை கற்றுக் கொடுத்து வருகிறது. அதே வரிசையில் தான் இந்த மிக்ஜாம் புயலும் அவர்களுக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோடிக் கணக்கில் பணம் ெகாடுத்து வாங்குபவர்கள் ஒவ்வொரு மழையின் போதும் நீச்சலடித்து தான் வெளியேற முடியும். தங்கள் வாகனங்களை இழக்க வேண்டியதிருக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது. படகில் தான் வீடுகளுக்கு சென்று வரக்கூடிய நிலை ஏற்படும். உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்ற நிலை தான் ஏற்படும். இதை உணர்ந்து ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை பொதுமக்கள் வாங்கக்கூடாது. இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வந்தால் மட்டும் தான் இதுபோன்ற நிலமைகளில் இருந்து தப்பிக்க முடியும். இதில் அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும், ஏரியில் தேங்கிய மழைநீரை எப்படி அகற்ற முடியும். ஏரியில் வெள்ளம் வரத் தான் செய்யும். தண்ணீர் தேங்கத்தான் செய்யும். நாம் தான் அங்கு வீடுகளை கட்டி வாழக் கூடாது. இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்’’ என்றார்.

ஆக்கிரமிப்பால் அழியும் விளிம்பில் ஏரிகள்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிட்லபாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, வீரராகவன் ஏரி, கடப்பேரி, மாடம்பாக்கம் ஏரி, வேங்கைவாசல் ஏரி, பெரும்பாக்கம் ஏரி, திருப்பனந்தாள் ஏரி, கீழ்கட்டளை ஏரி, சேலையூர் ஏரி உள்ளிட்ட 15 ஏரிகள் உள்ளன. இதில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் பெருக்கத்தால் அழியும் விளிம்பில் உள்ளன. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் இடமாகவும், குப்பைக் கழிவுகள் கொட்டி அசுத்தமாக்கப்பட்டு இந்த ஏரிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டுவதால் ஏரிகளின் அளவும் சுருங்கி வருகிறது. இதனால், தென்சென்னை பகுதிகளில் பல ஏரிகள் அழிந்து வருவதாக நீர்நிலை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கொட்டித்தீர்த்த மழையில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்; ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் எங்கே போகும்?.. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம் என ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mikjam ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...