×

புதுவையில் சம்பளம் வழங்காததால் போராட்டம் அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: புதுவையில் சம்பளம் வழங்காததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் 6 பேர் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புதுவையில் அமுதசுரபி மளிகை கடை, பார்களில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், கடந்த மாத இறுதியில் அமுதசுரபி பார்களில் சிலவற்றை கிஸ்தி கட்டாததை காரணம் காட்டி கலால்துறை சீல்வைத்தது. இதனால் மேலும் பல ஊழியர்கள் வேலையிழந்தனர். இதனிடையே நிலுவை சம்பளத்தை கேட்டும், தங்களுக்கு மாற்று வேலை வழங்கக்கோரியும் அமுதசுரபி ஊழியர்கள் தொடர்ந்து 32வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமுதசுரபி தலைமை அங்காடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலர் விஷத்தை அடுத்தடுத்து குடித்தனர். சக ஊழியர்கள் தடுத்து கூச்சலிடவே, விரைந்து வந்த பெரியகடை போலீசார் விஷம் அருந்திய 6 ஊழியர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் கிடைத்து வந்த அமுதசுரபி அதிகாரிகள், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி உள்ளிட்டோர் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு உடனே இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post புதுவையில் சம்பளம் வழங்காததால் போராட்டம் அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Amarusurabi ,New Dugu ,New Dinakarabi ,Dinakaran ,
× RELATED 4 பேருக்கு பன்றி காய்ச்சல், புதுவையில்...