×

எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் நிறைவடையும்

*விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணேகொள்புதூர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பேசியதாவது:

நிலம், வீட்டுமனை உள்ளிட்டவற்றை சர்வே செய்து கொடுக்க விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி ஓராண்டு ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நிலம் தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். தேங்காய் விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளை காக்கும் வகையில், தென்னையில் இருந்து கள், நீரா பானம் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும், தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரி நீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் வெளியேறுவதை தடுப்பதற்காக வனத்தை ஒட்டி, சோலார் மின்வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை 18 கி.மீ தூரம் சோலார் மின்வேலி அமைக்கப்படவில்லை.

சோலார் மின்வேலி அமைக்க கர்நாடகாவில் ₹1.50 கோடி வரையும், கேரளாவில் ₹75 லட்சத்திற்கு மேலும் நிதி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சோலார் மின்வேலிக்கு ₹6 முதல் ₹30 லட்சம் வரை மட்டுமே நிதி வழங்குகின்றனர். வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை, பிற செலவினங்களுக்கு போதிய நிதி இல்லாததால் வனஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, சோலார் மின்வேலி, கூடுதல் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில், ஊராட்சி தலைவர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். நெய்வேலியில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை அழித்த என்எல்சி நிறுவனத்திற்கு விவசாயிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம் என பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் சரயு பேசியதாவது: ஒவ்வொரு மாதமும் சர்வே பணிகளுக்காக, 9 ஆயிரம் மனுக்கள் வருகிறது. மாவட்டத்தில் 34 சர்வேயர்கள், உரிமம் பெற்ற சர்வேயர்கள் 70 பேர் உள்ளனர். ஒவ்வொரு மனுவின் சீனியாரிட்டிப்படி தான், அளவீடு பணிகள் செய்து வருகிறோம். தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

எண்ணே கொள்புதூர் கால்வாய் அமைக்கும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. இக்கால்வாய் செல்லும் பகுதிகளில் விவசாயிகள் சிலர் நிலம் கொடுக்க மறுப்பதால், பணிகள் தாமதமாகிறது. விவசாயிகளே பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் எடுக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால், இந்த திட்டம் விரைவில் நிறைவடையும். ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அனைத்து மானிய திட்டங்களின் பட்டியல், விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவல் வெளிப்படையாக தகவல் பலகையில் இடம்பெற வேண்டும். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மட்டுமே பேச வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் நிறைவடையும் appeared first on Dinakaran.

Tags : Ennekhiputur ,Krishnagiri ,Ennekhiputhur ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...