×

விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுமா?

*தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

பல்லடம் : திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் கோவை, வெள்ளகோவில், பல்லடம், சோமனூர், உடுமலை, அன்னூர், அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்பாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சை மூலப்பொருளாக கொண்டு 2ம் நம்பர் கவுண்ட் முதல் 30ம் நம்பர் கவுண்ட் நூல் உற்பத்தி செய்யும் 600க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன.

தினசரி சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 25 லட்சம் கிலோ கிரோ மற்றும் 15 லட்சம் கலர் நூல்களை உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நூற்பாலை, சைசிங் மில்கள் உள்பட ஜவுளி உற்பத்தி தொழில் மூலம் பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:

நூற்பாலைகளில் இருந்து கோம்பர் கழிவு பஞ்சை ஓ.இ. மில்கள் பெற்று அதனை விசைத்தறிக்கு பயன்படுத்தும் நூலாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகை நூலை சைசிங் மில்கள் பாவுநூலாக மாற்றி விசைத்தறிகளுக்கு வழங்குகின்றன. அந்த நூலை கொண்டு காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான கோம்பர் கழிவு பஞ்சு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதனால் உள்நாட்டில் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. உள்நாட்டில் பஞ்சு விலைக்கு, அதனைவிட கழிவு பஞ்சு அதிக விலைக்கு விற்பனையாகிறது. மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக கிரே காடா உற்பத்தி 30 சதம் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படையும். 5 லட்சம் தறிகளுக்கு நூல் கிடைக்காத நிலை ஏற்படும். லட்சக்கணக்காணேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். விசைத்தறி ஜவுளி தொழில், ஓ.இ. மில் தொழில் ஆகியவைகளை பாதுகாக்க மூலப்பொருள் சீரான விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். மின் கட்டணத்தை பழையபடி மாற்றி அமைக்க வேண்டும்.
அதேபோன்று வங்கி கடன் வட்டி வீதம் பழையபடி 8 சதவீதமாக வட்டி குறைக்க வேண்டும். வங்கி கடன் பெற்றதில் அசல் தொகையை செலுத்துவதில் இரண்டு வருட தவணை வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு காரணங்களால் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது.

துணி உற்பத்தி இழப்பால் அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு ஏற்படும். விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நாடா இல்லா தறி உரிமையாளர் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘மின் கட்டணங்களை சீரமைக்க வேண்டும். மேற்கூரை சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு நெட்வொர்க் கட்டணங்களை அகற்ற வேண்டும்’’ என்றார்.

The post விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Tirupur, Coimbatore district ,Dinakaran ,
× RELATED ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?