×

வருமானத்திற்கு அதிகமாக 66% சொத்து குவிப்பு அதிமுக மாஜி பெண் கவுன்சிலர் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: கரூரில் பரபரப்பு

கரூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த கரூர் அதிமுக மாஜி பெண் கவுன்சிலர், இன்ஜினியரான மகன், பேராசிரியையான மருமகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் கார்த்தி (43). இவர், 2014 முதல் 2021வரை மனைவி, தாய் பெயரில் வருமானத்தை மீறி சொத்து வாங்கி குவித்ததாகவும், புதிதாக வீடு கட்டியது, கார் வாங்கியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கார்த்தி, அவரது தாயும், அதிமுக முன்னாள் கவுன்சிலருமான காளியம்மாள் (65), கார்த்தியின் மனைவி கல்லூரி விரிவுரையாளர் கவிதா (38), ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த அறிக்கை கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 7 ஆண்டுக்கு முன் 3 பேரின் வங்கி கணக்கில் ரூ.2,83,337 இருந்தது. 2021ல் இது ரூ.1,52,74,979 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்த விசாரணையில், சம்பளம், சேமிப்புக்கு அதிகமாக 66 சதவீதத்துக்கு மேல் சொத்துகளை பதவியை தவறாக பயன்படுத்தி தாய், மனைவி பெயர்களில் கார்த்தி வாங்கியது உறுதியானது. இதையடுத்து நேற்று கரூர், வெங்கமேடு குமரன் நகரில் உள்ள கார்த்தி வீடு, குளத்துப்பாளையத்தில் உள்ள அவரின் தாய் காளியம்மாள் வீடு, மூலிமங்கலத்தில் உள்ள கார்த்தியின் மாமனார் வீடு என 3 இடங்களில் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

* 10 ஆண்டாக அதிமுக கவுன்சிலர்
கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் கார்த்தியின் தாய் காளியம்மாள், கடந்த 2006 முதல் 2011 வரை இனாம் கரூர் நகராட்சியிலும், 2011 முதல் 2016 வரை கரூர் நகராட்சியிலும் அதிமுக கவுன்சிலராக இருந்திருக்கிறார். கார்த்தியின் மனைவி கவிதா, தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

The post வருமானத்திற்கு அதிகமாக 66% சொத்து குவிப்பு அதிமுக மாஜி பெண் கவுன்சிலர் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: கரூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pandemonium ,Karur ,
× RELATED போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக...