×

நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: நெடுஞ்சாலை துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலை பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் சாந்தி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.250 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்காலிக சீரமைப்புப் பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். நிரந்தர சீரமைப்புப் பணிகளை 4 மாதக் காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், சாலை விபத்துகளைத் தடுக்க ரூ.150 கோடி மதிப்பீட்டில், 561 சாலைப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், சாலை சந்திப்புகளை ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய வேண்டும் என, அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த பணிகள் எல்லாம் விரைவாக முடிக்க வேண்டும். மேலும், “நம்ம சாலை செயலி“ மூலம் ஏதேனும் குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டால், அதனை உடனே சீரமைக்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அவற்றில் தகுதியான கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் ஆணை பிறப்பிக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் உள்ள அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் உள்ள 14 சாலைப் பணியாளர்கள் விருப்பத்தின் பேரில் அலுவலக உதவியாளராக மறுபணியமர்வு செய்யப்படுவார்கள்.

அதேபோல், கடந்த 7 வருடங்களுக்கு பிறகு நீண்டநாள் கோரிக்கையான இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தற்போது தகுதி வாய்ந்த வரைவு அலுவலர், இளநிலை வரைதொழில் அலுவலர், திறன்மிகு உதவியாளர் நிலை-1 இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படும். நீண்டநாள் கோரிக்கையான இளநிலை வரைத் தொழில் அலுவலர் பதவி உயர்வு தற்போது தகுதி வாய்ந்த உதவி வரைவாளர், திறன்மிகு உதவியாளர் நிலை-1 அவர்களுக்கு இளநிலை வரைத் தொழில் பதவி உயர்வு வழங்கப்படும். இதுமட்டுமின்றி, இளநிலைப் பொறியாளர் பதவியில் உள்ள காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க திறன்மிகு உதவியாளர்களின் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டியல் விரைவில் முதன்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டுப்பதவியில் (Feeder Cateogry) இளநிலைப் பொறியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த 34 நபர்கள் உள்ளனர். இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த 95 நபர்கள் உள்ளனர். இவர்களுக்கும் விரைவில் ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,A. V. Velu ,Highways Department ,Guindy Highway Research Station ,
× RELATED அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி